தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: இபிஎஸ் விமர்சனம்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்து: இபிஎஸ் விமர்சனம்
ADDED : மே 20, 2024 11:15 AM

சென்னை: ''லோக்சபா தேர்தலில் அதிமுக.,வுக்கு ஓட்டளிப்பவர்களை 'டபுள் என்ட்ரி' எனக்கூறி நீக்கிவிட்டார்கள், தேர்தல் ஆணையம் வெளியிடும் ஓட்டு சதவீதத்தில் குளறுபடியும், சந்தேகமும் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்தாக பார்க்கப்படுகிறது,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் மழைநீரை தேக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டினோம். திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின்பு எந்த தடுப்பணையும் கட்டவில்லை. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் முயற்சியை திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கேரள அரசு தடுப்பணை கட்டினால், அமராவதி ஆற்றுக்கு வரும் நீர் தடுக்கப்பட்டு தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திர அரசுகள் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
லோக்சபா தேர்தலில் பல்வேறு இடங்களில் அதிமுக.,வுக்கு ஓட்டளிப்பவர்களை 'டபுள் என்ட்ரி' எனக்கூறி நீக்கிவிட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்தாகத்தான் பார்க்கப்படுகிறது. அதேபோல, தேர்தல் முடிந்தவுடன் தேர்தல் ஆணையம் அறிவித்த ஓட்டுப்பதிவு சதவீதத்தில் குளறுபடியும், சந்தேகமும் உள்ளது.
ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் அடிக்கடி சிசிடிவி பழுது ஏற்படுகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் இதுபோன்று நடந்தது கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

