அ.தி.மு.க., உடன் கூட்டணிக்கு கதவு திறந்தே உள்ளது - அமித்ஷா: பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - திமுக
அ.தி.மு.க., உடன் கூட்டணிக்கு கதவு திறந்தே உள்ளது - அமித்ஷா: பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது - திமுக
ADDED : பிப் 07, 2024 10:40 AM

சென்னை: லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., உடன் கூட்டணிக்காக பா.ஜ.,வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இதற்கு, '' பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது'' என தி.மு.க., விமர்சனம் செய்துள்ளது.
கதவு
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி ஒன்றில், '' தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அ.தி.மு.க., உடன் கூட்டணிக்காக பா.ஜ.,வின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. பா.ஜ., தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கான நிறைய திட்டங்கள் இடம்பெறும்.
முக்கியமான மாநிலம்
ஜாதி, சமூகம், மொழி, மாநிலம் கடந்து, பிரதமர் மோடியின் தலைமைக்கு ஆதரவு உள்ளது. தமிழகம் முக்கியமான மாநிலம், அதற்கென தேர்தல் அறிக்கையில் நிறைய விஷயங்கள் இடம்பெற உள்ளது. தமிழ் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். நீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் கிடைக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்கொண்ட முயற்சி நல்ல முயற்சியாகும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
பூனைக்குட்டி
இது குறித்து தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணிக்காக பா.ஜ.,வின் கதவுகள் திறந்தே உள்ளன என அமித்ஷா கூறியதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. பா.ம.க., உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது அ.தி.மு.க.,வின் பலவீனத்தை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அமித்ஷாவுக்கு நல்ல எண்ணம்
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறுகையில், '' அ.தி.மு.க.,விற்காக கதவுகள் திறந்துள்ளன என அமித்ஷா கூறியது அவரது நல்ல எண்ணத்தை காட்டுகிறது. பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது'' எனக் கூறினார்.
விஜய் அரசியல் வருகை
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கி இருப்பது, பா.ஜ.,விற்கு பாதிப்பா என்ற கேள்விக்கு, '' ஜனநாயக நாட்டில் யாரும் புதிய கட்சியை துவங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். ஆனால் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்'' என அமித்ஷா பதில் அளித்தார்.

