ஈ.வெ.ரா.,வை ஆதரிப்பவர்களின் ஓட்டு வேண்டாம்: சீமான் அறைகூவல்
ஈ.வெ.ரா.,வை ஆதரிப்பவர்களின் ஓட்டு வேண்டாம்: சீமான் அறைகூவல்
UPDATED : டிச 28, 2025 03:46 AM
ADDED : டிச 28, 2025 12:33 AM

சென்னை: ''ஈ.வெ.ராமசாமியை ஆதரிப்பவர்கள் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம். எத்தனை முன்னோர் நமக்கு பெரியார் என்பதை, ஜன., 3ல் பட்டியலிடுவேன்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நா.த.க.,வின் மாநில பொதுக்குழு கூட்டம், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை திருவேற்காட்டில், நேற்று நடந்தது.
அதில், பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குற்றவாளிகளுக்கு தண்டனை, தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்ற ஆதரவு உட்பட, 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின், பொதுக்குழுவில் சீமான் பேசியதாவது:
நா.த.க., முன்னெடுக்கும் அரசியல் கோட்பாட்டை அறிந்து கொள்ளவே, அரை நுாற்றாண்டு ஆகும். எல்லாமே ஈ.வெ.ரா., என்பது, அவர்களது கோட்பாடு. இந்த நாட்டை திருடர் கூடமாக மாற்றி, அதில் மக்களுக்கும் 1,000 ரூபாய் பகிர்ந்தளிக்கிறது, திராவிட திருட்டு கூட்டம்.
இந்த நிலத்தில் இருக்கும் கட்சிகளை ஒழித்து, துாய ஆட்சியை உருவாக்க வேண்டும். தனித்து நின்று அங்கீகாரம் பெற்றோம். கடைசி நேரத்தில் நமக்கு சின்னத்தை ஒதுக்கினர்.
மக்கள் நம் சின்னத்தை தேடி, 8.22 சதவீதம் என 36 லட்சம் ஓட்டுகளை அளித்துள்ளனர். இவ்வளவு துாரம் நம்மை ஏற்றி விட்டவர்கள், இன்னும் மீதியிருப்பதையும் நமக்கு தருவர்; 2026 தேர்தலில் நம்மை ஆதரிப்பர்.
மடிக்கணினி, இலவச அரிசி, மோட்டார் பைக், கார், 'டிவி' தருவோம் என அவர்கள் அறிவித்தால் , 'வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவேன்' என நான் சொல்வேன்.
இலவசம் என்பது வளர்ச்சி திட்டம் அல்ல; அது வீழ்ச்சி திட்டம்; கவர்ச்சி திட்டம். தேசத்தை நாசமாக்கியது இலவசம் தான். அது, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. நா.த.க., ஆட்சியில், பஸ் கட்டணம் கிடையாது; சிறந்த கல்வியை வழங்குவோம்.
எல்லாமே ஈ.வெ.ரா., என்பவர்கள் யாரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம். என் இனத்தின் முன்னோர் ஒவ்வொருவரும் எனக்கு பெரியார் என்பவர்களே ஓட்டு போடுங்கள். எத்தனை பெரியார் உள்ளனர் என, ஜன., 3ம் தேதி சொல்லப் போகிறேன். அன்று, தற்போது அடை யாளம் காட்டப்பட்டிருக்கும் ஈ.வெ.ரா.,வை அடக்கம் செய்துவிட்டு தான் வெளியேறுவேன்.
ஊழல், பசி, பட்டினி இல்லாத நாட்டை, அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்வோம். நல்ல கல்வி, குடிக்க தண்ணீர், பயணிக்க நல்ல பாதை, நல்ல மருத்துவம், அரசு மருத்துவமனைகளில் தான் அனைவருக்கும் சிகிச்சை, அரசு அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என சட்டத்தை இயற்ற வேண்டும்.
அப்படி செய்தால், நல்ல சமூகம் படைக்கப்படும். அதை நோக்கியே என் பயணம் இருக்கும்.
நான் அதிகாரத்துக்கு வந்த பின், பாலியல் குற்றம் நடந்தால், குற்றவாளிகளை உடனுக்குடன் கொன்று விடுவேன். நம் ஆட்சியில், 'பார்த்து போ, பெண்களை எதுவும் செய்து விடாதே' என, ஆண் பிள்ளைகளை பெற்றோர் அறிவுறுத்துவர். பெண் பிள்ளைகளுக்கு துப்பாக்கி சுடுதல் முதல், அனைத்து தற்காப்பு கலைகளும் கற்று தருவேன்.
ஹிந்துக்களை பா.ஜ., வும், சிறுபான்மையினரை தி.மு.க.,வும் அணி திரட்டுகின்றன. நாங்கள், தமிழர்களை ஒருங்கிணைக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருமாவளவன்
பிரசவம் பார்த்தாரா?
பொதுக்குழுவுக்கு முன், சீமான் அளி த்த பேட்டி: கல்லுாரியில் அரசியல் பேசக்கூடாது; ஆனால், சினிமா பேசலாம். இறை வழிபாட்டை விமர்சித்த கட்சி, திரை வழிபாட்டை போற்றுகிறது. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு யாரென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், நடிகர் நாடாள தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையை என்னவென்று சொல்வது? தேர்தல் அறிக்கை என்பது வெறும் சடங்கு. 234 தொகுதிகளை வென்று, நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றுவது எங்கள் இலக்கு. என்னையும், விஜயையும் பா.ஜ., தான் உருவாக்குகிறது என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார். என்னையும், விஜயையும் பா.ஜ., பெற்றெடுக்கும்போது, அருகில் இருந்து பிரசவம் பார்த்தது திருமாவளவனாக இருக்குமோ? இவ்வாறு அவர் கூறினார்.
திருமாமளவன் தான் பிரசவம் பார்த்தார்.விடுதலை சிறுத்தைகள் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் வெளியிட்டுள்ள அறிக்கை: சீமானை முதன்முதலில் அரசியல் மேடையேற்றியது திருமாவளவன் தான். அந்த மேடையில், ஈ.வெ.ரா., வுக்கு வெகுவாக புகழாரம் சூட்டினார். அதன்பின், வி.சி., பொதுக்கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்றார். அவரே பலமுறை, 'திருமாவளவனிடம் அரசியல் பாடம் கற்றுக் கொண்டேன்; அவர் தான் என் ஆசான்' என பேசினார். கருணாநிதி இறந்த பின், அவரை விமர்சனம் செய்து, சீமான் கைதானார். அதன்பின், அவருக்கு கிடைத்த ஊடக வெளிச்சத்தின் காரணமாக தனி கட்சியை துவக்கினார். எனவே, அரசியல் களத்தில் முதன்முதலில் திருமாவளவன் தான், சீமானை மேடை ஏற்றி பிரசவம் பார்த்தார் என்பதில் மாற்று கருத்து இல்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

