தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது * பா.ஜ., மாநில பொறுப்பாளர் பேட்டி
தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது * பா.ஜ., மாநில பொறுப்பாளர் பேட்டி
ADDED : ஏப் 05, 2025 10:41 PM
அவனியாபுரம்:''தமிழக மக்களிடம் தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது,'' என, தமிழக பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
ஓட்டு வங்கிக்காக தி.மு.க., - காங்., கட்சியினர் அரசியல் செய்கின்றனர். வக்ப் வாரிய சட்ட திருத்தம், ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வக்ப் வாரியம் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. திருச்சி அருகே ஜீயபுரத்தில், முழு கிராமமும் வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் பல மாநிலங்களில் இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஓட்டு வங்கியை மனதில் வைத்து, வக்ப் திருத்த சட்டத்தை தி.மு.க., குறை கூறுகிறது.
அதுமட்டுமல்ல, கச்சத்தீவு விவகாரத்திலும், தமிழக முதல்வர் அரசியல் செய்கிறார். மக்களிடம் தி.மு.க.,வின் சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து விட்டது.
நூற்றுக்கணக்கான தேர்தல் வாக்குறுதிகளை, தேர்தலுக்கு முன் தி.மு.க., அளித்தது. அதில், ஒன்றிரண்டை மட்டும் தான் தி.மு.க., நிறைவேற்றி உள்ளது. இதிலும் மக்களை ஏமாற்றுகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. மக்களை திசை திருப்புவதற்காக மொழி பிரச்னையையும் கிளப்பி உள்ளது. தி.மு.க.,-எம்.பி., ராஜா ஹிந்துக்களின் ஆன்மிக நம்பிக்கைகளையும், அடையாளங்களையும் கொச்சைப்படுத்துவது போல பேசி ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை நேர்மையான சிப்பாய். கட்சித் தலைமை, தமிழக பா.ஜ., தலைவர் மாற்றும் குறித்து முடிவு எடுக்கும்வரை, அவர்தான் தலைவர். கட்சிக்குள் பிரச்னை ஏற்படுத்தும் நோக்கோடு, சில விஷமிகள், அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றப் போவதாக வதந்தி கிளப்புகின்றனர். இந்த விஷயத்திலும், தலைமை நல்ல முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

