ADDED : டிச 13, 2025 06:49 AM

சென்னை :
பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 30 லட்சம் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாக, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தகவல்கள் தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்தனர். ஆனால், அது பொய் என்பது, இப்போது அம்பலமாகி உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதார நிலை, தொழில், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளின் நிலை குறித்த தகவல்களை தொகுத்து, 'இந்திய மாநிலங்கள் குறித்த, புள்ளி விபரங்கள் அடங்கிய கையேடு' என்ற ஆவணத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், தி.மு.க., அரசின் பொய்கள் தோலுரிக்கப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சி வந்தபின், மூன்று ஆண்டுகளில், 728 தொழிற்சாலைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இது வெறும் 1.85 சதவீத வளர்ச்சி தான். அதேபோல், இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை, 4.29 லட்சம் அதிகரித்திருக்கிறது.
வெறும் 4.29 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்ட நி லையில், 30 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாக தி.மு.க., அரசு கூறி வருவது, எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

