கோவில் பணியாளரை தாக்கிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,வால் வெடித்தது புதிய சர்ச்சை
கோவில் பணியாளரை தாக்கிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,வால் வெடித்தது புதிய சர்ச்சை
ADDED : ஜன 04, 2026 01:21 AM

திருச்சி: திருச்சி, வயலுார் கோவிலுக்கு சென்ற தி.மு.க., - எம்.எல்.ஏ., பழனியாண்டி, கோவில் ஊழியரை அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ., பழனியாண்டியின் மகன் விமலாதித்தன். இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், சுவாமி தரிசனம் செய்வதற்காக, பழனியாண்டி, விமலாதித்தன் மற்றும் குடும்பத்தினர் நேற்று காலை, 11:00 மணிக்கு, வயலுார் முருகன் கோவிலுக்கு சென்றனர்.
அப்போது, வி.ஐ.பி., தரிசனத்திற்கான கதவு பூட்டப்பட்டு இருந்தது. அந்த பணியில் ஈடுபடும் ஊழியர் விடுமுறையில் இருந்ததால், மாற்று சாவி எடுத்து வருவதற்காக, வேறு ஒரு ஊழியர் சென்றுள்ளார்.
அவர் வருவதற்கு தாமதமானதால், 15 நிமிடம் காத்திருந்த பழனியாண்டி ஆத்திரமடைந்து, அங்கிருந்த கோவில் ஊழியரை தாக்கி உள்ளார்.
உடனே, அங்கு இருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி, சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். வயலுார் முருகன் கோவிலுக்குள் நடந்த இந்த சம்பவத்தால், மற்ற ஊழியர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

