ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுகவே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுகவே காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : ஏப் 01, 2024 03:42 PM

கோவை: ''ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் திமுக தான் காரணம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: காங்கிரசும் - திமுக.,வம் 1974ல் திட்டமிட்டு சதி செய்து தான் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்திருக்கிறார்கள். இதில் திமுக.,வுக்கு முழு பங்களிப்பு இருக்கிறது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் நாடகத்திற்காக கச்சத்தீவை மீட்டு தாருங்கள் என பலமுறை கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் கொடுக்க கருணாநிதியிடம் வெளியுறவு செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, கச்சத்தீவை கொடுக்க சம்மதம் இல்லை என கூறியிருந்தால் மத்திய அரசு அதனை கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்போது கச்சத்தீவை கொடுக்க சம்மதித்துவிட்டு இப்போது கடிதம் எழுதுகின்றனர்.
காங்கிரஸ் - திமுக எப்போதெல்லாம் ஒன்று சேர்கிறார்களோ, அப்போதெல்லாம் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். இந்திய இறையாண்மை மீது திமுக.,வுக்கு நம்பிக்கை இருக்கிறதா? ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் திமுக தான்.
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைப்பது தெரிந்தும் கருணாநிதி ரகசியம் காத்துள்ளார். பெரிய அளவில் போராட்டம் வெடிக்காமல் பார்த்து கொள்வதாகவும் கருணாநிதி உறுதி அளித்திருந்தார். கச்சத்தீவு பிரச்னையை தீர்ப்பதற்கு என்னவெல்லாம் சாத்தியக்கூறுகள் இருக்கிறதோ, அதெல்லாவற்றையும் மத்திய அரசு ஆராய்ந்துக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்பிக்கை உள்ளது. தமிழக பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு மீட்பது பற்றி இருக்கும். இது எங்கள் முக்கிய நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

