தி.மு.க., கையில் தான் பந்து உள்ளது: ஷோடங்கர் பேட்டியால் கூட்டணியில் சலசலப்பு
தி.மு.க., கையில் தான் பந்து உள்ளது: ஷோடங்கர் பேட்டியால் கூட்டணியில் சலசலப்பு
UPDATED : டிச 23, 2025 12:18 AM
ADDED : டிச 23, 2025 12:16 AM

ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி ஆகிய கோரிக்கைகளை ஏற்க, தி.மு.க., தலைமைக்கு காங்கிரஸ் விதித்த 15 நாள் கெடு முடிந்துவிட்டது. 'தி.மு.க., கையில் பந்து இருப்பதால், நாங்கள் காத்திருக்கிறோம்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.
தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்த, கிரிஷ் ஷோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரசில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு கடந்த 3ம் தேதி, தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியது.
அப்போது, ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள், ராஜ்யசபா 'சீட்' ஆகிய மூன்று கோரிக்கைகளை ஸ்டாலினிடம், ஷோடங்கர் வலியுறுத்தினார். தி.மு.க.,வின் முடிவை, 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
முதல்வர் ஸ்டாலினுடன் இந்த சந்திப்பு நிகழ்ந்த மறுநாளே, காங்கிரஸ் மேலிட நிர்வாகியும், ராகுலின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசினார். சென்னை பட்டினப்பாக்கத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பில், கூட்டணி குறித்து பேசப்பட்டதாக சர்ச்சையானது.
ஏற்கனவே, கரூர் சம்பவம் தொடர்பாக, விஜயுடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மொபைல் போனில் பேசியது நினைவிருக்கலாம். இப்படியான சூழலில், த.வெ.க., கூட்டணியை விரும்பும் காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநில நிர்வாகிகளிடம், டில்லியில் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார் கிரிஷ் ஷோடங்கர். அப்போது பலரும், த.வெ.க., கூட்டணிக்கு விருப்பமும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆங்கில 'டிவி'க்கு கிரிஷ் ஷோடங்கர் அளித்த பேட்டி: தமிழகத்தில் 58 ஆண்டுகளாக நாங்கள் ஆட்சியில் இல்லை. இருந்தாலும், எங்கள் கட்சியினர் தேர்தலுக்காக மிகக் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்த உழைப்பு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.
தி.மு.க., தரப்பினர் டில்லி வந்து, எங்கள் தலைவர்களை சந்தித்து பேசினர். அதன் பின், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, டிச., 15க்குள் கூட்டணியை இறுதிப்படுத்த வலியுறுத்தினோம். அப்போது தான், எங்கள் கட்சி வேட்பாளர்களை அடையாளம் கண்டு, களமிறக்க போதுமான நேரம் கிடைக்கும்.
தற்போது, தி.மு.க., கையில் தான் பந்து உள்ளது. நாங்கள் அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைகளை, தி.மு.க., தரப்பு கண்டுகொள்ளவே இல்லை. இச்சூழலில் கிரிஷ் ஷோடங்கரின் பேட்டி, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர் -

