காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
UPDATED : டிச 29, 2025 02:11 PM
ADDED : டிச 29, 2025 02:09 PM

சென்னை: கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை தடையின்றி கிடைக்கும் போதை பொருட்களால் சீரழித்து, காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது திமுக அரசு என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
வடமாநில இளைஞரை போதை கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ பகிர்ந்து, அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணியில் பணிபுரியும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான சூரஜ், கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானார். மற்றவர்கள் சமூக ஊடகத்தில் ரீல் பதிவு செய்வதற்காக அவரது கழுத்தில் கத்தியை வைத்தபோது, அதைத் தட்டிக் கேட்ட காரணதால் தாக்கப்பட்டு இருக்கிறார்.
இதுதான் இன்று திமுக ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின் கவலைக்குரிய யதார்த்தம். போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்தாலும் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான அரசியல் பிரசாரம் மற்றும் கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது.
கட்டுக்கோப்பான மாநிலமாக இருந்த தமிழகத்தை, தடையின்றி கிடைக்கும் போதை பொருட்களால் சீரழித்து காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறது திமுக அரசு. காட்டுமிராண்டித்தனமான ஆட்சியாக மாற்றியதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

