பா.ஜ., கொள்கைகள் அடிப்படையில் தி.மு.க., அரசு இயங்குகிறது: சீமான்
பா.ஜ., கொள்கைகள் அடிப்படையில் தி.மு.க., அரசு இயங்குகிறது: சீமான்
ADDED : செப் 12, 2025 02:58 AM

ராமநாதபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பாக, மலை மாநாடு, தண்ணீர் மாநாடு, கடல் மாநாடு என அடுத்தடுத்து நடத்தப்போவதாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
திருச்சியில், அரசு பள்ளிக்கு விடுமுறை அறிவித்து விட்டு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை நடத்த வேண்டிய அவசியம் என்ன? சிவகங்கையில் இதுபோன்ற முகாமில், மனுக்களை வாங்கிக் கொண்டு சாக்கடையில் போட்டுச் சென்றீர்கள். இது மாதிரியான கொடுமைகளை செய்வதற்கு பெயர் திராவிட மாடல் ஆட்சி.
துணை ஜனாதிபதியைப் பொறுத்தவரை தமிழர், கன்னடர், தெலுங்கர் என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ்., கோட்பாட்டின் படி தான் அவரும் இயங்குவார். தமிழராக இருப்பதால், ஹிந்தி திணிப்பு, நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை எதிரப்பாரா?
பா.ஜ.,வின் அனைத்து கொள்கைகளிலும் ஒத்துப்போகும், ஒரு மாநில ஆட்சி நடக்கிறது என்றால், அது, தி.மு.க., ஆட்சிதான். 'ஆபரேஷன் சிந்துாரை' ஆதரித்து முதலில் பேரணி நடத்திவர், நம் முதல்வர் ஸ்டாலின். 'ஆபரேஷன் சிந்தூரை', ஆதரித்து உலக நாடுகளுக்கு சென்று பேசியவர், தி.மு.க., - -எம்.பி., கனிமொழி.
அன்று பா.ஜ., கூட்டணியில் இருந்தவர்கள், இன்று காங்.,குடன் இருக்கிறார்கள். அப்படியென்றால் பாசிசம், மதவாதத்திற்கு, தி.மு.க., எதிரானது என எதை வைத்து சொல்வது? குஜராத் கலவரத்தின்போது, 'அது ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்னை' என கருணாநிதி சொன்னார். இப்போது, பா.ஜ., கூட்டணியில் இல்லாததால், மணிப்பூர் கலவரத்தை எதிர்க்கின்றனர்.
முன்னாள் கவர்னர் இல.கணேசன் சென்னையில் மறைந்தபோது, பிரதமர் மோடி சார்பிலான மரியாதையை, முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து செய்தது ஏன்? யார் நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதற்கு மேல், வேறு ஏதேனும் சான்று தேவையா?
மக்களின் வாழ்க்கைக்காக கட்சி நடத்தும் நாங்கள் அடுத்ததாக, மலைகளை பாதுகாப்பதற்காக, மலைகளின் மாநாட்டை தர்மபுரியிலும், கடல் பாதுகாப்புக்காக கடல் மாநாட்டை தூத்துக்குடியிலும், தண்ணீர் பாதுகாப்பை வலியுறுத்தி தண்ணீர் மாநாட்டை தஞ்சையிலும் நடத்தப் போகிறோம். ஐம்பூதங்கள் இல்லாமல், பூமியில் எந்த உயிரினங்களும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.