நவோதயா பள்ளிகள் துவங்கும் சூழலை தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது: பழனிசாமி
நவோதயா பள்ளிகள் துவங்கும் சூழலை தி.மு.க., அரசு ஏற்படுத்தியுள்ளது: பழனிசாமி
ADDED : டிச 18, 2025 06:25 AM

சென்னை: 'உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் துவங்கும் சூழலை தி.மு.க., அரசு ஏற்படுத்தி உள்ளது' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: கல்வி கொள்கையில் இரட்டை நிலைப்பாடு எடுத்து, தமிழக மாணவர்களின் வாழ்வில் முதல்வர் ஸ்டாலின் விளையாடி வருகிறார். வெளியே இருமொழி கொள்கை என பேசிவிட்டு, காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் நவோதயா பள்ளிகள் அமைய, உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் சூழ்நிலையை ஏற்படுத்துவது வெட்கக்கேடானது.
மத்தியில் காங்கிரசும், தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் தி.மு.க., அரசும் இருந்தபோது தான், மாநில பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு சென்றது. கடந்த 45 ஆண்டுகளுக்கு முன், மத்திய காங்கிரஸ் அரசு, நவோதயா பள்ளிகளை துவங்க உத்தரவிட்டது.
அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., 'தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மாட்டேன்' என தெள்ளத் தெளிவாக அறிவித்து செயல்படுத்தினார். இதைத்தான், 30 ஆண்டு கால அ.தி.மு.க., அரசும் கடைப்பிடித்தது.
கடந்த 2017ல் ஒரு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'நவோதயா பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நம் உயிர் மூச்சாம் இருமொழி கொள்கையை பாதிக்கும் என்பதால், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி, தடையாணை பெற்றோம்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை, 2021 வரை அ.தி.மு.க., அரசு கண்காணித்தது. கடந்த 1ம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிடாமல், ஜூனியர் வழக்கறிஞர் ஆஜராகி உள்ளார்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாமல், தி.மு.க., வழக்கறிஞர் வில்சன் வாதாடி உள்ளார். சரியான வாதங்கள் வைக்கப்படாததால், கடந்த 15ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை துவக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களை காப்பாற்ற, பல கோடி ரூபாய் அரசு பணத்தை செலவிட்டு, மூத்த வழக்கறிஞர்களை வைத்து தி.மு.க., அரசு வாதிடுகிறது. ஆனால், மொழிப் பிரச்னை தொடர்பான முக்கிய வழக்கில், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதிடவில்லை. இதனால், இருமொழி கொள்கையில் முதல்வர் ஸ்டாலினின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

