ADDED : டிச 21, 2025 01:21 AM
சென்னை: மத்திய அரசு நிதியில் கட்டப்பட்ட கிடங்குகள் தொடர்பாக ஆய்வு நடத்தக் கோரியும், உழவு இயந்திரங்களை வாடகைக்கு விடுவதில் தி.மு.க.,வினருக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாகவும், மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம், தமிழக பா.ஜ., விவசாய அணியினர் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் இந்தாண்டில் நெல் உற்பத்தி, 20 லட்சம் டன் வீணாகியுள்ளது.
மத்திய அரசு, நெல்லை பாதுகாக்க கிடங்குகள் கட்டுவதற்கு போதிய நிதியுதவி வழங்கியும், தமிழக அரசு கவனம் செலுத்தாமல், நெல்லை வீணடித்து விட்டது.
இதை, மத்திய அதிகாரிகளை அனுப்பி நேரடியாக கள ஆய்வு செய்யுமாறு, டில்லியில் சில தினங்களுக்கு முன், மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகானை சந்தித்து வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் வேளாண் உழவு இயந்திரங்கள் வாங்குவதற்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. அந்த இயந்திரங்களை வாங்கி, வேளாண் துறை, கூட்டுறவு சங்கங்கள் வாடகைக்கு விடுகின்றன. இவற்றை, தி.மு.க.,வினருக்கு மட்டுமே வாடகைக்கு விடுகின்றன. இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாதால், பழுதாகி விடுகின்றன.
மத்திய 'ஆத்மா' வேளாண் திட்டம் வாயிலாக, புதிய வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க, வேளாண் பட்டதாரிகளை நியமித்துள்ளது. அவர்களுக்கான சம்பளத்தையும் மத்திய அரசே வழங்குகிறது. ஒருவருக்கு மாதம், 45,000 ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் அந்த பணியாளர்களுக்கு, 15,000 ரூபாய் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. அந்த பணியாளர்கள், மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, விவசாயிகளை அழைத்து செல்லும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது குறித்து விசாரிக்குமாறும், மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
***

