தி.மு.க., சொன்னதையாவது செய்யுங்கள் அமைச்சர் பேச்சுக்கு சி.ஐ.டி.யு., பதிலடி
தி.மு.க., சொன்னதையாவது செய்யுங்கள் அமைச்சர் பேச்சுக்கு சி.ஐ.டி.யு., பதிலடி
ADDED : அக் 22, 2024 11:50 PM
சென்னை:'அரசு போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது தொடர்பாக, தி.மு.க., வழங்கிய பரிந்துரையை நிறைவேற்றுங்கள்' என, போக்குவரத்து துறை அமைச்சருக்கு, சி.ஐ.டி.யு., பதில் அளித்துள்ளது.
தீபாவளியையொட்டி, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கும் முடிவை கைவிட வேண்டும் என, சி.ஐ.டி.யு., உள்ளிட்ட சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. அதற்கு, 'சி.ஐ.டி.யு., தங்களுக்கான பிரச்னைகளை மட்டுமே எப்போதுமே முன்னிறுத்தும்' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் பொதுச்செயலர் ஆறுமுகநயினார் வெளியிட்டுள்ள அறிக்கை:
சி.ஐ.டி.யு., மீது அமைச்சர் அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டசபையில் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், மொத்த கொள்முதல் அடிப்படையில், தனியார் பஸ்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கொள்கை அடிப்படையில் முடிவு செய்து விட்டு, மக்கள் நலனுக்காக தனியார் பஸ்களை இயக்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த, அமைச்சர் முயற்சி செய்கிறார். 50 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செய்யப்பட்ட பணியை, இப்போது ஏன் கழகங்களால் செய்ய முடியவில்லை என்பதை, அமைச்சர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.
புதிய பஸ்கள், நியமனத்தை கூறி தனியார் மயமாக்கல் நடவடிக்கை குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார். ஆனால், அரசாணைகளின்படி, 9,000 புதிய பஸ்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், 1,500 பஸ்களும், 25,000 காலி பணியிடங்களில், 685 நியமனம் மட்டுமே முடிவுற்றுள்ளது. இவ்வாறு இருக்க தவறான தகவல்களை கூறி, சி.ஐ.டி.யு., மீது குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்?
கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க., குழுவால் போக்குவரத்து கழகங்களை சீரமைப்பது குறித்த ஆய்வறிக்கையை, அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம், தற்போதைய முதல்வர் வழங்கினார். இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பதே சி.ஐ.டி.யு.,வின் கோரிக்கை.
மக்கள் நலன், தொழிலாளர் நலனில் சி.ஐ.டி.யு., சமரசம் செய்யாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

