டெல்டாகாரன் என்று சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாத ஸ்டாலின்; பிரேமலதா குற்றச்சாட்டு
டெல்டாகாரன் என்று சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாத ஸ்டாலின்; பிரேமலதா குற்றச்சாட்டு
ADDED : பிப் 09, 2025 03:41 PM

மதுரை; நானும் டெல்டாகாரன் தான் என்று கூறும் முதல்வர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு செய்தது என்ன என்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;
எப்போதுமே ஆளுங்கட்சி தங்களை ஒரு பிரச்னையில் இருந்து தற்காத்துக் கொள்ள மத்திய அரசின் மீது பழியைச் சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். அப்படித் தான் தமிழகத்துக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று இங்குள்ள அரசு மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறது.
ஆனால் மத்திய அரசிடம் கேட்டால் அப்படி எல்லாம் இல்லை, எல்லா மாநிலத்துக்கும் ஒதுக்கும் அதே நிதியை தான் ஒதுக்குகிறோம் என்கின்றனர். இது தமிழகம் சார்ந்த பிரச்னை என்றால் ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் மீது குற்றம் சொல்லி தப்பிக்க பார்ப்பார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் ஒரே உதாரணம்.
அந்த வகையில் இன்றைக்கு கல்வி மட்டுமல்லாது விவசாயம், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன நிவாரணத்தை முதல்வர் வழங்கினார் என்று நான் கேட்கிறேன். எதற்கு எடுத்தாலும் நானும் டெல்டாகாரன் தான் என்று முதல்வர் சொல்கிறார்.
மயிலாடுதுறை, நாகை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு நான் சென்று வந்தேன். அந்த பகுதிகளுக்கு ஒருமுறை கூட முதல்வர் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை பார்க்கவில்லை. எப்போதுமே மத்திய அரசை நம்பியே இருப்பதற்கு தமிழக அரசு எதற்கு இருக்க வேண்டும்.
அப்படி என்றால் தமிழக அரசின் நிதி எங்கே போகிறது. கனிமவள கொள்ளை, டாஸ்மாக் வருமானம், லஞ்ச ஊழல், அனைத்து துறைகளிலும் விலைவாசி உயர்வு என தமிழகமே மாட்டிக் கொண்டுள்ளது. நாட்டிலேயே அதிக கடன் உள்ள முதல் மாநிலம் நம்ம தமிழகம்தான்.
இப்படி பல உதாரணங்கள் இருக்கும் போது சாக்குபோக்கு சொல்லி முதல்வர் தப்பிக்க முடியாது. தமிழக மக்கள் வாய்ப்பு கொடுத்து அவரை (ஸ்டாலின்) முதல்வர் ஆக்கி உள்ளனர். கொடுத்த வாக்குறுதிப்படி மக்களுக்கு அவர் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்ய வேண்டும்.
அடுத்தவர் மீது பழிபோட்டு தப்பிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். இதற்கான பதில் 2026ல் நிச்சயம் தெரியும். தமிழகத்திலேயே முதல் முறையாக யாருடைய கூட்டணி இல்லாமல் நின்ற கட்சி தே.மு.தி.க. இன்றைக்கு கூட்டணி இல்லாமல் தேர்தலில் தி.மு.க.,வை நிற்கச் சொல்லுங்கள். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி இல்லாமல் தேர்தலில் நிற்பார்களா?
தேர்தல் என்பது வேறு, வியூகம் என்பது வேறு. தனித்து போட்டியிட வேண்டும் என்பதை 10 ஆண்டுகள் முன்பே சாதித்தது தே.மு.தி.க. ஆகையால், வெற்றி ஒன்றே தான் எங்களுக்கும் இலக்கு. எங்கள் கொள்கை, கோட்பாட்டுக்கு உட்பட்டு நல்ல கூட்டணி அமைத்து 2026ல் தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

