திருமண உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: திண்டுக்கல் அலுவலர் கைது
திருமண உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: திண்டுக்கல் அலுவலர் கைது
ADDED : டிச 25, 2025 04:53 AM

திண்டுக்கல்: திருமண உதவித்தொகை வழங்க பொறியாளரிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் நரசிங்கபுரம் வி.கள்ளுப்பட்டியை சேர்ந்தவர் பொறியாளர் பிரியதர்ஷன் 30. சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்காக 2024 ஜூலையில் விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவருக்கு உதவித்தொகை, 8 கிராம் தங்கம் வழங்கப்பட உள்ளது.
இதை பெறுவதற்கு உரிய ஆவணங்களுடன் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் இருந்து அறிவிப்பு வந்தது.இதையடுத்து பிரியதர்ஷன் உரிய ஆவணங்களுடன் சமூகநல விரிவாக்க அலுவலர் உமாராணியை அணுகினார்.
உதவித்தொகை பெற ரூ.6 ஆயிரம் தரவேண்டும் எனகேட்டுள்ளார்.அவ்வளவு பணம் இல்லை என கூற ரூ.3 ஆயிரத்தை கொடுத்துவிட்டு உதவித்தொகை, தங்கத்தை பெற்றுச்செல்லுமாறு கூறி உள்ளார்.
திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் பிரியதர்ஷன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான போலீசார் அறிவுரைப்படி நேற்று காலை 11:00 மணிக்கு உமாராணியிடம் பிரியதர்ஷன் பணத்தை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உமாராணியை கைது செய்தனர். இதன் பின் அலுவலகத்தில் 4 மணி நேரம் மேலாக விசாரணை நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய் தனர்.

