'தினமலர் - பட்டம்' நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி 212 பள்ளிகள், 965 மாணவர்கள் பங்கேற்று உற்சாகம்
'தினமலர் - பட்டம்' நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி 212 பள்ளிகள், 965 மாணவர்கள் பங்கேற்று உற்சாகம்
UPDATED : செப் 14, 2025 02:45 AM
ADDED : செப் 14, 2025 02:37 AM

சென்னை: 'தினமலர்' நாளிதழின், மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கான பிரமாண்ட சதுரங்க போட்டி, வி.ஐ.டி., பல்கலையில் நேற்று நடந்தது. 965 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்று விளையாடினர்.
பள்ளி மாணவ - மாணவியரின் கல்வித்திறனை மட்டுமின்றி, அவர்களின் தனித்திறன்களையும் வளர்த்தெடுக்கும் நோக்குடன், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'பட்டம்' இதழ் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த இதழ் சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கான சதுரங்க போட்டி கடந்தாண்டு நடைபெற்றது. அதற்கு பள்ளிகள் அளவிலும், மாணவர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதையடுத்து இந்த ஆண்டும், பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க போட்டி, வண்டலுார் - கேளம்பாக்கம் சாலை, வி.ஐ.டி., பல்கலை அரங்கில் நேற்று நடந்தது. 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். 'பட்டம்' இதழ் பதிப்பாசிரியர் வெங்கடேஷ், வி.ஐ.டி., பல்கலை கூடுதல் பதிவாளர் மனோகரன், 'தினமலர்' நாளிதழ் துணை பொதுமேலாளர் சேகர் ஆகியோர், குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.
காலை, 10:00 மணிக்கு முதல் சுற்று போட்டிகள் துவங்கின; மாலை 5:00 மணிக்கு இறுதி சுற்று போட்டிகள் நடந்தன. ஒரு சுற்று, 30 நிமிடங்கள் வீதம், ஏழு சுற்றுகளாக நடத்தப்பட்டது. இருபாலரிலும் 9, 11, 13, 15 வயது பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து, 212 பள்ளிகளை சேர்ந்த, 965 மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
சர்வதேச போட்டிகளில் நடுவராக பங்கேற்று வரும் ரவிக்குமார், இப்போட்டியின் தலைமை நடுவராக இருந்தார். அவரின் தலைமையில், 32 நடுவர்கள் பணியாற்றினர்.
போட்டியின் ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் உடனுக்குடன் கணினியில் உள்ளீடு செய்து, வீரர்கள் பெற்றுள்ள புள்ளி விபரங்களை, முகப்பு பலகையில் வெளியிட்டு, சர்வதேச போட்டிக்கு இணையாக இந்த போட்டியை சிறப்பாக நடத்தினர். முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர் - வீராங்கனையருக்கு, முறையே 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசுத் தொகையுடன் கோப்பை வழங்கப்பட்டது.
தவிர, ஒவ்வொரு பிரிவிலும் 4 முதல் 13வது இடம் வரை பிடித்த, 104 வீரர்களுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. மேலும், சிறந்த போட்டியாளர்களை களமிறக்கிய 24 பள்ளிகளுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.