கல்லுாரிகளில் உறுப்பினர் சேர்க்கை தி.மு.க.,வுக்கு தினகரன் கண்டனம்
கல்லுாரிகளில் உறுப்பினர் சேர்க்கை தி.மு.க.,வுக்கு தினகரன் கண்டனம்
ADDED : ஜூலை 22, 2025 06:59 AM
சென்னை : 'கல்லுாரி வாயிலில் நின்று, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை நடத்துவது, அதிகார துஷ்பிரயோகம்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வினர், உறுப்பினர் சேர்க்கை என்ற பெயரில், வீடு வீடாகச் சென்று, மகளிர் உரிமைத் தொகை வருகிறதா, இலவச பஸ்சில் தானே பயணம் செய்கிறீர்கள் என மிரட்டி, ஆதார், தொலைபேசி எண்களை பெற்றனர்.
தற்போது கல்லுாரிகளில், 'ஓரணியில் தமிழகம்' என, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை துண்டறிக்கை வினியோகிப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உதவிப் பேராசிரியர்கள் துவங்கி, முதல்வர் வரை, கல்லுாரிகளில் காலியாக இருக்கும், பல ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கட்சிக் கொடியுடன், கல்லுாரி வாயில்களை மறித்து, கும்பலாக நிற்கும் தி.மு.க.,வினரை கடந்து செல்லவே அச்சப்படுவதாக மாணவ - மாணவியர் தெரிவித்துள்ளனர். இது அதிகார துஷ்பிரயோகம்.
தி.மு.க.,வினரின் இத்தகைய செயல், கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் என, முதல்வருக்கு தெரியவில்லையா? வீடு வீடாகச் சென்று மிரட்டினாலும், கல்லுாரி வாயிலில் நின்று கூவினாலும், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

