தேர்தல் நெருங்குவதால் கோவிலுக்கு சென்றாரா தி.மு.க., -- எம்.பி.,
தேர்தல் நெருங்குவதால் கோவிலுக்கு சென்றாரா தி.மு.க., -- எம்.பி.,
ADDED : பிப் 24, 2024 12:51 AM

தர்மபுரி:தர்மபுரி தி.மு.க., - எம்.பி., பூமி பூஜை நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்த நிலையில், கோவிலுக்கு சென்றதாக அவர் பதிவிட்ட புகைப்படத்தை கொண்டு, இது தேர்தல் நாடகம் என வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், வெற்றி பெற்ற பின், லோக்சபாவில் முதல் நாளில், 'ஈ.வெ.ரா., வாழ்க' என்ற கோஷத்துடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த பூமி பூஜையில் பங்கேற்ற இவர், 'பாதிரியார் எங்கே, இமாம் எங்கே, அவர்களையும் அழைத்து வாருங்கள்' என, அரசு அதிகாரிகளை வசை பாடினார்.
அதேபோல், அதியமான்கோட்டையில் நடந்த பூமி பூஜையில் அங்கு வைத்திருந்த செங்கற்களை எட்டி உதைத்ததாகக் கூறி, தி.மு.க., நிர்வாகிகள் எம்.பி.,க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பின், பெரும்பாலான பூமி பூஜை நிகழ்வுக்கு எம்.பி., அழைக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாலக்கோடு புதுார் பொன் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்ற எம்.பி., செந்தில்குமார், கருவறைக்கு சென்றதாக, அவருடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதை பலரும் பகிர்ந்து, 'தேர்தல் நெருங்குவதால், தி.மு.க., - எம்.பி., ஆன்மிக நாடகம் போடுகிறார்' என, கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

