டவுட் தனபாலு: தேர்தல் அறிக்கையை அமல் படுத்துவதில் கோட்டை விட்டுடுறீங்க
டவுட் தனபாலு: தேர்தல் அறிக்கையை அமல் படுத்துவதில் கோட்டை விட்டுடுறீங்க
ADDED : பிப் 25, 2024 12:56 AM

தி.மு.க., - எம்.பி., கனிமொழி: தி.மு.க., ஒவ்வொரு தேர்தலிலும் மக்களை சந்தித்து, அவர்களுடைய கருத்துகளை கேட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை உருவாக்கி வருகிறது. மக்களின் கோரிக்கை, கருத்துகளை, அறிவுரைகளை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்று, பரிசீலித்து முதல்வரிடம் கலந்துரையாடி, பின் முழுமையான தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும்.
டவுட் தனபாலு: நடிகர் வடிவேலு காமெடி போல, 'ஓப்பனிங் எல்லாம் நல்லாத் தான் இருக்கு... ஆனா, பினிஷிங் சரியில்லையே' என்பது மாதிரி, தேர்தல் அறிக்கை எல்லாம் பக்காவா தயாரிக்குறீங்க... ஆனா, அதை அமல் படுத்துறதுல தான், 'கோட்டை' விட்டுடுறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
சிவகங்கை காங்., - எம்.பி.,கார்த்தி: எம்.பி.,க்கு பெரிய அளவில் அதிகாரம் இல்லை என்றாலும், என்னால் முடிந்த அளவு, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் நிதியை சமமாக பகிர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்று மசோதா தாக்கல் செய்துள்ளேன்.
டவுட் தனபாலு: எம்.பி., க்களுக்கு பெரிதாக எந்த அதிகாரமும் இல்லை என சொல்றீங்களே... அதனால, வர்ற லோக்சபா தேர்தல்ல சிவகங்கை சீட் எனக்கு வேண்டாம்னு மறுத்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
வேலுார் வி.ஐ.டி., பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன்: ஊழலுக்கு முதல் காரணம், தேர்தலில் அரசியல்வாதிகள் பணம் கொடுப்பதும், மக்கள் பணம் வாங்குவதும் தான். கேரளாவில் எந்த கட்சியும் மக்களுக்கு பணம் கொடுப்பது கிடையாது. அதுபோல இங்கும் பணம் கொடுக்கக்கூடாது. அந்த நிலை ஏற்பட்டால் தான் நாடு முன்னேறும்.
டவுட் தனபாலு: தமிழகத்துல, ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு முன்பு, லட்சங்களில் தான் ஊழல் செய்தாங்க... எப்ப, ஓட்டுக்கு பணம் கொடுக்கிற கலாசாரத்தை அரசியல்வாதிகள் ஆரம்பிச்சாங்களோ, அப்ப இருந்து அவங்க பண்ற ஊழல்களும் கோடிகள்ல மாறிடுச்சு என்பதில், 'டவுட்'டே இல்லை!

