பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவு
பிரதமரின் கோவை பேரணிக்கு அனுமதி வழங்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 16, 2024 01:59 AM

கோவை மாவட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் பேரணிக்கு அனுமதி மறுத்த உதவி ஆணையரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பேரணிக்கு அனுமதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார் தாக்கல் செய்த மனுவில், 'பிரதமரின் மக்கள் நல திட்டங்களை எடுத்துக்காட்டும் வகையில், மேட்டுப்பாளையம் சாலை வழியாக, 4 கி.மீ., துாரத்துக்கு பிரதமர் பங்கேற்கும் பேரணி நடத்த அனுமதி கோரினோம்.
சட்டம் ஒழுங்கு, பொது அமைதிக்கு இடையூறு என காரணம் காட்டி, ஆர்.எஸ்.புரம் உதவி ஆணையர் நிராகரித்து விட்டார். இதை ஏற்க முடியாது; உதவி ஆணையர் உத்தரவை ரத்து செய்து, 18ம் தேதி பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி, ''நாடு முழுதும் போலீஸ் அனுமதி பெற்று, இதுபோன்ற பேரணி நடத்தப்படுகிறது. ஆனால், பிரதமர் பங்கேற்கும் பேரணிக்கு, தமிழகத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது,'' என்றார்.
மறுக்க முடியாது
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மக்களை சந்தித்து, மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பிரதமர் விரும்புகிறார். மக்களை பிரதமர் நேரடியாக சந்திக்கும் வகையில், இந்த 4 கி.மீ., துார பேரணியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
யாருக்கும் சாலை வழி பேரணிக்கு, ஒரு போதும் அனுமதி வழங்கியதில்லை என்ற உதவி ஆணையரின் நிலைப்பாட்டில் எந்த அடிப்படையும் இல்லை.
பல சந்தர்ப்பங்களில், பேரணி வாயிலாக மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், அனுமதி மறுப்புக்கு, இதை முகாந்திரமாக எடுக்க முடியாது. அரசியல் தலைவர்கள், மக்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யும் போது, குறிப்பாக, பிரதமரோ அல்லது முதல்வரோ பங்கேற்கும் போது, பொது மக்களின் போக்குவரத்துக்கு நிச்சயமாக சிறிது இடையூறு இருக்கும். அதற்காக, அனுமதி மறுக்க முடியாது.
பொது மக்களின் சுமுகமான போக்குவரத்தை உறுதி செய்ய, மாற்று வழிகளை போலீசார் கண்டறிய வேண்டும். இந்த தலைவர்களை எல்லாம், மக்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர் என்பதால், அவர்களை சந்திப்பதற்கு தடுக்கக்கூடாது.
சுமுகமாக நடக்க...
மக்களை சந்திக்க, சாலை வழி பேரணியை தேர்ந்தெடுத்துள்ளனர். மாலை 5:00 மணிக்கு பின் தான் பேரணி நடப்பதால், மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பில்லை.
பிரதமருக்கு சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து கொள்வர்; அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவர். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாநில போலீசாரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, மத ரீதியாக பதற்றமான பகுதி என்ற காரணம் கூறி, அனுமதி நிராகரிக்க முடியாது. உதவி ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அனுமதி வழங்கவும், உரிய நிபந்தனைகள் விதித்து, போலீஸ் பாதுகாப்பு வழங்கவும், உதவி ஆணையருக்கு உத்தரவிடப்படுகிறது. எந்த வழியாக சாலை பேரணி நடத்த வேண்டும்; எவ்வளவு துாரம் என்பது குறித்து, போலீசார் நிபந்தனை விதிக்கலாம்.
நிகழ்ச்சியின் போது பிளக்ஸ் போர்டு நிறுவ அனுமதிக்கக் கூடாது. உதவி ஆணையர் விதிக்கும் நிபந்தனைகளை மனுதாரர் பின்பற்ற வேண்டும். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், பிரதமரின் பாதுகாப்புக்கு எந்த இடையூறும் ஏற்படாமல், சாலை வழி பேரணி சுமுகமாக நடக்க அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

