செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
செப்பேடுகள், தெய்வத் திருமேனிகளை ஒப்படைக்க வேண்டும்:- தருமபுரம் ஆதீனம் கோரிக்கை.
ADDED : டிச 29, 2025 08:06 PM

மயிலாடுதுறை: கோயில் தனியறையில் வைக்கப்பட்டுள்ள செப்பேடுகள் மற்றும் தெய்வத் திருமேனிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தருமபுரம் ஆதினம் கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தரிசனம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது:
சீர்காழி தலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு கும்பாபிஷேக பணியின் போது தேவார பதிக செப்பேடுகள் மற்றும் தெய்வத் திருமேனிகள் கிடைத்தது. அவற்றை ஆதீனத்திடம் ஒப்படைக்காமல் கோயிலில் தனி அறையில் வைத்து, சீல் இடப்பட்டு காவல் போடப்பட்டுள்ளது.
செப்பேடுகள், தெய்வ திருமேனிகளை தருமபுரம் ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைத்தால் அவற்றை கண்ணாடி பேழையில் வைத்து எல்லோரும் காணும் வகையில், காட்சியகம் தொடங்க முயற்சி செய்து வருகிறோம். தமிழக அரசு தீர்க்கமான முடிவு எடுத்து ஆதீன நிர்வாகத்திடம் ஒப்படைக்க உதவி செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
ஞானசம்பந்தர் செப்பேடுகள் மட்டுமல்ல நாவுக்கரசர், சுந்தரர் தேவாரங்களும் உள்ளன. அவற்றை முழுமையாக படிப்பதற்கு கூட அவகாசம் இல்லாமல் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. பெட்டியில் வைத்து சீல் வைப்பதனால் பாசிகள் படர்ந்து பயனற்றதாக உள்ளது.
பூமியில் ஆண்டுகள் எவ்வாறு செப்பேடுகள் இருந்ததோ அதேபோல் தற்போது தனியறையில் பூட்டி வைக்கப்பட்டு பயனற்றதாக உள்ளது. அவற்றை வெளிக்கொண்டு வந்தால் நமது பண்பாடு கலாசாரம் குறித்து வேறு என்ன தகவல்கள் இருக்கிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் மூலம் அறிய மிகப்பெரிய காட்சியகம் தொடங்க வேண்டும் என நினைக்கிறோம். செலவை ஏற்க ஆதீன நிர்வாகம் தயாராக உள்ளது. தமிழக முதல்வர் இதில் தலையிட்டு மத்திய அரசிடம் பேசி செயல்படுத்திட வேண்டும் என விரும்புகின்றோம். இதுவே சீர்காழி பகுதி மக்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்

