பட்டாசு ஆலைகளில் தொடரும் விதிமீறல்; வெடி விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள்
பட்டாசு ஆலைகளில் தொடரும் விதிமீறல்; வெடி விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள்
ADDED : பிப் 18, 2024 11:52 PM
சிவகாசி : விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் கண்துடைப்பாக நடத்தப்படும் சோதனைகளால் தொடரும் வெடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் சோதனையை தீவிரப்படுத்தி விதிமீறல் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகரில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் எதிர்பாராத விதமாக எப்போதாவது விபத்து ஏற்படுவது இயல்பு தான். ஆனால் விதிகளை மீறினால் விபத்து ஏற்படும் என தெரிந்தும் சில பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி நடக்கிறது.
உரிமம் பெற்ற ஆலைகளில் குறிப்பிட்ட அளவு மணி மருந்து வைத்து பட்டாசு தயாரிக்க வேண்டும். சில ஆலைகளில் அதிகம் மருந்து பயன்படுத்துகின்றனர். ஆலைகளில் உள்ள அறையின் அளவைப் பொறுத்து அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். சில சில ஆலைகளில் நெருக்கடியில் அதிக ஆட்கள் அமர்ந்து பட்டாசு தயாரிக்கின்றனர். இது போன்று விதிகளை மீறும் போது பட்டாசு விபத்து ஏற்படுகிறது.
நேற்று முன்தினம் சாத்துார் அருகே ராமுதேவன்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்துக்கு விதி மீறலே காரணம் என தெரிய வந்துள்ளது. இங்கு ஒரே அறையில் அதிக ஆட்கள் அதிகப்படியான மருந்துகள் வைத்து பட்டாசு தயாரித்துள்ளனர். இதனால் உயிர் பலியும் அதிகமாகியுள்ளது. இதுபோன்று விதி மீறி பட்டாசு தயாரிப்பவர்கள் மீது போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வருவாய், போலீஸ் உள்ளிட்ட சில துறைகளை இணைந்து நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் மெயின் ரோட்டில் உள்ள பட்டாசு ஆலைகளை கண்துடைப்பாக சோதனை செய்கின்றனர். நகரை விட்டு வெளியே காட்டுப்பகுதிகளில் இயங்கும் ஆலைகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் அங்கு அனைத்து விதிகளும் மீறப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மாவட்ட நிர்வாகம் அமைத்த குழுவினர் விதிகளை மீறி பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிந்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

