ஜாபர் சாதிக் உடன் தொடர்பு?: என்.சி.பி., விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் அமீர்
ஜாபர் சாதிக் உடன் தொடர்பு?: என்.சி.பி., விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் அமீர்
ADDED : ஏப் 02, 2024 10:24 AM

சென்னை: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக்குடன் இருந்த தொடர்பு குறித்து, டில்லியில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், திரைப்பட இயக்குனர் அமீர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
டில்லியில் மார்ச் 9ல், தி.மு.க., முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரை, 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக, திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் தொழில் அதிபர்கள் அப்துல் பாசித் புகாரி, சையது இப்ராஹிம் ஆகியோருக்கு, இன்று டில்லியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, 'சம்மன்' அனுப்பினர்.
'விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என் தரப்பு நியாயங்களையும் உண்மைகளையும், அதிகாரிகளிடம், 100 சதவீதம் எடுத்து வைத்து வெற்றியுடன் திரும்பி வருவேன்' என, அமீர் கூறி வருகிறார். இவர், டில்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன், இன்று விசாரணைக்கு ஆஜரானார்.
ஏற்கனவே, அமீருடன் இருந்த தொடர்பு குறித்தும், போதை பொருள் கடத்தல் தொழில் குறித்து அமீருக்கு தெரியும் என்றும், ஜாபர் சாதிக் விரிவான வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால், அமீருடன் பல மணி நேரம் விசாரணை நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

