சட்டவிதிகளின்படியே கோவில் நிலங்களில் கட்டுமானம்; ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்
சட்டவிதிகளின்படியே கோவில் நிலங்களில் கட்டுமானம்; ஐகோர்ட்டில் அறநிலையத்துறை பதில்
UPDATED : ஜூலை 27, 2025 05:30 AM
ADDED : ஜூலை 26, 2025 08:20 PM

சென்னை:'கோவில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி, சட்ட விதிகளை பின்பற்றியே, கோவில் நிலங்களில் கோவில் நிதியை பயன்படுத்தி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை பதிலளித்துள்ளது.
அறநிலையத்துறை சட்ட விதிகளை மீறி, கோவில் நிலங்களில், கோவில் நிதி 1,000 கோடி ரூபாயை பயன்படுத்தி, கலாசார மையங்கள், நிர்வாக கட்டடங்கள் கட்டும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாப்பூரை சேர்ந்த 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை கமிஷனரின் பதில் மனுவை, சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் தாக்கல் செய்தார்.
அதன் விபரம்:
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக, 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன; 23 ஆயிரம் கடைகள், 76,500 கட்டுமானங்கள் உள்ளன.
வருவாய் இல்லை இவற்றின் வாயிலாக, கடந்தாண்டு ஏப்ரல் முதல், 2025 மார்ச் வரையிலான ஓராண்டு காலத்தில், 345.06 கோடி ரூபாய் குத்தகை வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், பாசன வசதி இல்லாததாலும், நகரமயமாதல் காரணமாகவும், பெரும்பாலான நிலங்களில் இருந்து எந்த வருவாயும் ஈட்ட முடிவதில்லை.
இந்த நிலங்களில் திருமண மண்டபங்கள், அரங்கங்கள், கடைகள் கட்டுவதன் வாயிலாக, கோவிலுக்கு வருவாய் கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, ஆக்கிரமிப்புகளில் இருந்தும், இந்த நிலங்களை பாதுகாக்க முடியும் என்பதால், கட்டுமானங்கள் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
முறையாக உரிய ஆய்வுகள் நடத்திய பின்னரே, இந்த நிலங்களில் கட்டுமானங்கள் கட்டி, வருவாய் ஈட்ட முடிவானது.
அறங்காவலர் குழு தீர்மானத்தின் அடிப்படையில், உரிய அனுமதிகளை பெற்ற பின், இந்த கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன.
அறநிலையத்துறை சட்ட விதிகளின்படியே, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு உள்ளாகக்கூடாது என்பதை கருத்தில் வைத்து, அந்த நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
நீக்க வேண்டும் கோவில் நிலங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள, கோவில் உபரி நிதியை பயன்படுத்த கூடாது என, எந்த சட்டப்பிரிவும் தெரிவிக்கவில்லை. அதனால், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என, இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீக்க வேண்டும்.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
'எந்த கோவிலுக்கு, எந்த சட்ட விதியை மீறி, கோவில் நிதி பயன்படுத்தப்பட்டது' என்பது குறித்து விளக்க மனு தாக்கல் செய்யும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆக., 8க்கு தள்ளி வைத்தனர்.

