காற்றாலையை ஒட்டிய மனைப்பிரிவுகளுக்கு கிடுக்கி: என்.ஓ.சி.,க்காக மீண்டும் அலையும் நிலை
காற்றாலையை ஒட்டிய மனைப்பிரிவுகளுக்கு கிடுக்கி: என்.ஓ.சி.,க்காக மீண்டும் அலையும் நிலை
ADDED : செப் 11, 2025 01:39 AM

சென்னை:காற்றாலைகளை ஒட்டிய தனியார் நிலங்களில், மனைப்பிரிவு திட்டங்களை செயல்படுத்தும் போது, கூடுதல் தடையின்மை சான்றுக்காக, அதிகாரிகள் அலைய விடுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மனைப்பிரிவு திட்டங்களுக்கு, 'ஆன்லைன்' முறையில் ஒப்புதல் வழங்கும் வகையில், ஒற்றைச்சாளர முறை அமலுக்கு வந்துள்ளது. இதில், மனைப்பிரிவு திட்டங்களுக்கு, விரைவாக அனுமதி வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
குற்றச்சாட்டு
இந்நிலையில், காற்றாலைகள் உள்ள பகுதிகளில், புதிய மனைப்பிரிவு மற்றும் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்துவோரை, கூடுதல் தடையின்மை சான்றுக்காக, அதிகாரிகள் அலைய விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, பல்வேறு இடங்களில் 20,000 காற்றாலை 'டவர் கள்' அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உயரம் சராசரியாக, 80 அடி வரை உள்ளது.
காற்றாலைகள் அமைக்கும் போது, அக்கம் பக்கத்தில் வீடுகள் இருந்தால், அதில் இருந்து, 1,640 அடிக்குள் 'டவர்' அமைக்கக் கூடாது என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, 2023ல் அரசாணை வெளியிட்டது.
ஆனால், இந்த விதி அருகில் உள்ள நிலங்கள் காலியாக இருக்கும்போது பொருந்தாது. எனவே, புதிதாக காற்றாலை அமைக்கும் நிறுவனங்கள், அருகில் உள்ள நிலம் காலியாக இருக்கும் போது, தங்கள் நிலத்தின் எல்லை வரை காற்றாலை அமைத்து விடுகின்றன.
சில ஆண்டுகள் கழித்து, அந்த காலி நிலங்களில், வீடுகள் கட்டும்போது அல்லது மனைப்பிரிவுகள் ஏற்படுத்தும் போது, காற்றாலை டவரில் இருந்து, பாதுகாப்பான தொலைவில் இருக்கிறதா என, மின்சார வாரியத்திடம் தடையின்மை சான்று வாங்கி வர வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், மனைப்பிரிவு திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
தடையின்மை சான்று
இது குறித்து, இந்திய கட்டுமான வல்லுனர்கள் சங்கத்தின், தென்னக மைய நிர்வாகி எஸ்.ராம பிரபு கூறியதாவது:
ஏற்கனவே வீடுகள் இருக்கும் இடங்களை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே காற்றாலைகளுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. காலி நிலங்களுக்கு பக்கத்தில், காற்றாலைகள் ஏற் படுத்தும் போது, எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
இதனால், காற்றாலைகள் வந்த பின், அதன் பக்கத்தில் உள்ள காலி நிலங்களை, மனைகளாக மேம்படுத்துவதில் பிரச்னை ஏற்படுகிறது.
இதற்கு புதிதாக தடையின்மை சான்று பெற, அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதை பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக இல்லை. இதனால், புதிய மனைப்பிரிவு திட்டங்களை, செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
கட்டடங்களுக்கு 'செட்பேக்' எனப்படும், பக்கவாட்டு காலியிடங்கள் விடப்படுவது போன்று, காற்றாலைகள் அமைக்கும் போதே, உரிய காலியிட கட்டுப்பாடுகள் விதிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.