தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்; இலங்கை அதிபருக்கு முதல்வர் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்; இலங்கை அதிபருக்கு முதல்வர் வலியுறுத்தல்
ADDED : டிச 16, 2024 09:16 PM

சென்னை: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகேவை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
2 நாள் பயணமாக இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். எரிசக்தி, மீனவர்கள் வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந் நிலையில், இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகேவை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியிருப்பது நம்பிக்கை தருகிறது.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்தும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திரும்ப ஒப்படைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

