ADDED : அக் 10, 2024 12:36 AM
'தொழில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் எளிதான தீர்வை நோக்கி, சுமூகமாக செயல்பட வேண்டும்' என, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு தமிழக பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீவத்ஸ்ராம்
தமிழக தலைவர், சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு
பல ஆண்டுகளாக உலகம் முழுதும் இருந்து அன்னிய நேரடிய முதலீட்டை, மாநிலத்திற்குள் ஈர்த்து வருவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
அரசின் செயல் திறனுள்ள கொள்கைகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வது தொடர்பான பல நடவடிக்கைகள் காரணமாக, தமிழகம் பல துறைகளில் குறிப்பாக, உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது.
தொழில் துறை சூழல் அமைப்பில் உள்ள அனைத்து முதலீட்டாளர்களும், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்கும், செழிப்பதற்கும் உகந்த சூழலை வழங்குவதில், தமிழக அரசின் முயற்சியை பாராட்டுகிறோம்.
பொருளாதார நடவடிக்கைகளின் வேகமும், தமிழகத்தின் உயர்வான பிம்பமும் நிலைத்திருக்க, சமீபகால தொழில் சர்ச்சையில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் எளிதான தீர்வை நோக்கி, சுமூகமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஜி.எஸ்.கே.வேலு
தமிழக தலைவர், 'பிக்கி' எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு
தொழிலுக்கு உகந்த சூழல் மற்றும் வலுவான நிர்வாகத்தால் தமிழகம், இந்தியாவில் முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது.
சாம்சங் தொழிலாளர்களின் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தம் குறித்து கவலையுடன், அமைச்சர்கள் அன்பரசன், ராஜா, கணேசன் ஆகியோர் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.
மாநிலத்தின் தொழில் துறை வேகத்தையும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் தன்மையையும் பராமரிக்க, விரைவாக தீர்வு காண வேண்டும். அனைத்து நிறுவனங்களையும் ஆக்கப்பூர்வமான பேச்சில் ஈடுபட கேட்டுக் கொள்கிறோம்.
தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இரு தரப்புக்கும் இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் தீர்வை கண்டறிய, நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். தொழிலாளர்கள், நிறுவனம் ஆகிய இரு தரப்பின் நலன்களும் உறுதி செய்யப்பட வேண்டும்.

