பிரதமர் அழைப்புக்கு காத்திருக்கிறோம் கடிதம் வெளியிட்டு முதல்வர் தகவல்
பிரதமர் அழைப்புக்கு காத்திருக்கிறோம் கடிதம் வெளியிட்டு முதல்வர் தகவல்
ADDED : ஏப் 02, 2025 09:45 PM
சென்னை:சந்திக்க நேரம் கேட்டு, பிரதமருக்கு கடந்த மாதம் எழுதிய கடிதத்தை, தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு, அழைப்புக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.
லோக்சபா தொகுதி மறுவரையறை தொடர்பாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம், சென்னையில் மார்ச் 22ல் நடந்தது.
அதில், 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான, லோக்சபா தொகுதிகளின் மறுசீரமைப்பை, மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமரை சந்தித்து பேசுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மார்ச் 27ல், பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், கூட்டு நடவடிக்கை குழு தீர்மானங்களை வழங்குவதற்காக, சந்திப்புக்கு அனுமதி கோரி இருந்தார். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், பிரதமருக்கு தாம் எழுதிய கடிதத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்டு, முதல்வர் கூறியுள்ளதாவது:
சென்னையில் மார்ச் 22ல், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தின் தீர்மானங்களை, பல்வேறு கட்சிகளின் எம்.பி.,க்களுடன் இணைந்து, பிரதமரிடம் நேரில் அளித்து, தொகுதி மறு வரையறை தொடர்பான, எங்கள் கவலைகளை தெரிவிக்க, நேரம் கேட்டிருந்தோம்.
ஏற்கனவே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பிரதமரை உடனடியாக சந்திக்க விரும்புகிறோம்; அவரது விரைவான பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

