ADDED : பிப் 03, 2024 01:14 AM

சென்னை: சென்னை - ஹாங்காங் இடையே, நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை நேற்று துவங்கியது.
சீனாவின் ஹாங்காங் - சென்னை இடையே, பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த, 'கேத்தே பசிபிக்' ஏர்லைன்ஸ் விமான சேவை, கொரோனா தாக்கம் காரணமாக, 2020 மார்ச்சுடன் நிறுத்தப்பட்டது.
அந்த விமானம், சென்னையில் இருந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென்கொரியா நாடுகளுக்கு செல்ல இணைப்பு விமானமாகவும், தொழில் துறையினர் மற்றும் சுற்றுலா பயணியருக்கு மிகவும் வசதியாகவும் இருந்தது.
விமான சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் முதல் விமானம் ஹாங்காங்கில் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, 103 பயணியருடன் சென்னைக்கு வந்தது. அதில், வந்தவர்களை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின், அந்த விமானம், 129 பேருடன் ஹாங்காங்கிற்கு, அதிகாலை 2:20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் வாரத்தில் புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
பயணியர் வருகையை பொறுத்து, தினசரி விமானமாக, இயக்கப்படும் என, விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.

