கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்
கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் துவக்கம்
ADDED : மார் 09, 2024 02:31 AM

சென்னை: விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில், 'எச்.பி.வி.,' தடுப்பூசி திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு, மனித பாப்பிலோமா வைரஸ் எனப்படும், 'எச்.பி.வி.,' வைரஸ் முக்கிய காரணமாகும். எச்.பி.வி., தடுப்பூசி திட்டம், இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில், 9 - - 14 வயது வரையிலான, பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில், எச்.பி.வி., தடுப்பூசி திட்டம் இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது.
தடுப்பூசி, ஒன்பது முதல் 14 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும், இரண்டு டோஸ் வழங்கப்படும். முதல் தடுப்பூசி போடப்பட்ட நாளில் இருந்து, 180வது நாளில் அடுத்த தடுப்பூசி போட வேண்டும். முதற்கட்டமாக, விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, புற்றுநோய் நிறுவன பரிசோதனை மையத்தில், தகுதியான 2,000 சிறுமிகளுக்கு, முதல் டோஸ் எச்.பி.வி., தடுப்பூசி போடப்படும்.
அதன்பின், மாநில சுகாதாரத்துறை, தேசிய சுகாதாரப் பணி, ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், விழுப்புரம் நகரில் உள்ள, ஒவ்வொரு பள்ளிகளிலும் சாத்தியமான வகையில், படிப்படியாக தடுப்பூசி போடப்படும். இதையடுத்து, மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு விரிவுப்படுத்தப்படும்.
துவக்க நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைத் தலைவர் சேஷசாயி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

