சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
சாராய பலிகள் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை வலுக்கிறது! : சபையில் அமளி, வெளியே ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
UPDATED : ஜூன் 23, 2024 01:45 PM
ADDED : ஜூன் 22, 2024 11:48 PM

சென்னை: கள்ளக்குறிச்சி சாராய பலிகள் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவ்விவகாரத்தில் சட்டசபையில் அமளியும், வெளியே கட்சிகளின் ஆர்ப்பாட்டமும் தொடர்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த 160க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 31; புதுச்சேரி ஜிப்மரில் மூன்று; சேலம் அரசு மருத்துவமனையில் 17; விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேர் என, 55 பேர் இறந்துள்ளனர்; 21 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
நடவடிக்கை
இச்சம்பவம் தமிழகம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நகரின் மையப் பகுதியில் போலீஸ் நிலையம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலேயே கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள், போலீசார் உதவியின்றி இவ்வாறு நடக்க சாத்தியமில்லை என்று பலரும் கூறுகின்றனர்.
சம்பவம் நடந்ததும், கலெக்டர் மாற்றம், எஸ்.பி., உட்பட போலீசார் தற்காலிக பணிநீக்கம், வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் என, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும், இறப்பு அதிகம் என்பதாலும், வெளி மாநிலத்தவர் தொடர்பு இருப்பதாலும், இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., விசாரித்தால் தான் அனைத்து உண்மைகளையும் கண்டறிய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
'இவ்வழக்கை தமிழக அரசு விசாரித்தால், உண்மைகள் வெளி வராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார். அவரது கட்சியினர் தமிழக அரசை கண்டித்து, நேற்று மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பலர் கைது செய்யப்பட்டனர்.
அரசு தயக்கம்
அ.தி.மு.க., பொதுச்செயலரும் இதே கோரிக்கையை இரண்டு நாட்களாக வலியுறுத்தி வருகிறார். சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சபையிலும் வெளியிலும் இதை கோஷமாக எழுப்பி வருகிறார். வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க அரசு தயக்கம் காட்டக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். சாராய விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் இரண்டாம் நாளாக நேற்றும் அமளியில் ஈடுபட்டனர்; வெளிநடப்பும் செய்தனர். சம்பவத்திற்கு பொறுப்பேற்று, முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
பா.ம.க., தலைவர் அன்பு மணியும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி உள்ளார். கடிதம் வாயிலாக அண்ணாமலை தெரிவித்த தகவல்களையும், உளவுத்துறை தொகுத்து அனுப்பிய ஆவணங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாங்கள் தெரிவித்தன.

