ரூ.1,900 கோடி அரிசி கடத்தல்; சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை
ரூ.1,900 கோடி அரிசி கடத்தல்; சி.பி.ஐ., விசாரிக்க கோரிக்கை
ADDED : நவ 21, 2024 02:10 AM
சென்னை : 'தமிழகத்தில், 1,900 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருப்பது குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ரேஷன் கடைகளில் வழங்க வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள், உரியவர்களை சென்றடையாமல், 2022 - -23ல் நாடு முழுதும் 69,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அரிசி, வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதால், 1,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுஉள்ளது.
இது கடும் கண்டனத்திற்குரியது. அதிர்ச்சியளிக்கும் இந்த விபரங்கள்,சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான, இந்திய ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது.
ரேஷன் கடைகளில் மொத்தம் 21.67 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச அரிசி தான் கடத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 1,900 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.2 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டிருப்பதை மன்னிக்கவே முடியாது.
அரசு அதிகாரிகளின் துணையின்றி, கடத்தல் நடக்க வாய்ப்பே இலலை. எனவே, அரிசி கடத்தல் குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

