ADDED : டிச 13, 2025 07:46 AM

நமது நிருபர்
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்காக, கரூர் கலெக்டர் அலுவலக பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, சிபிஐ எஸ்பி பிரவீன்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தவெக பொதுச்செயலர் ஆனந்த், இணை பொதுச்செயலர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம், சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அரசு தரப்பு மற்றும் போலீசார் வழங்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் த.வெ.க., தலைவர் விஜயை சம்மன் அனுப்பி நேரில் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். கரூருக்கு விஜயை அழைத்தால் பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருப்பதால், சென்னை சிபிஐ அலுவலகத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, விஜய்க்கு டில்லியில் இருந்து சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

