பதிவுத்துறை டி.ஐ.ஜி.,யிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
பதிவுத்துறை டி.ஐ.ஜி.,யிடம் சி.பி.சி.ஐ.டி., விசாரணை
ADDED : அக் 10, 2024 02:40 AM

சென்னை:நில அபகரிப்பு கும்பலுக்கு உடந்தையாக இருந்த பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத்தை, ஒரு நாள் காவலில் எடுத்துள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசார், அவரது அலுவலக உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.
சேலம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.,யாக ரவீந்திரநாத், 57, பணியாற்றி வருகிறார். அவர், மதுரை சரகத்தையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். ரவீந்திரநாத், 2021ல், தென் சென்னை மாவட்ட பதிவாளராக பணிபுரிந்தார். அப்போது, போலி ஆவணம் வாயிலாக, பெருங்களத்துாரில், கலைவாணி என்பவருக்கு சொந்தமான, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க உடந்தையாக இருந்துள்ளார்.
அதேபோல, சென்னை தாம்பரம் அருகே, வரதராஜபுரத்தில் சையது அமீன் என்பவருக்கு சொந்தமான, 5 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக அபகரித்த கும்பலுக்கும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார், இரண்டு வழக்குகள் பதிவு செய்து, ரவீந்திரநாத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அவரை, பெருங்களத்துார் நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், காவல் எடுக்க அனுமதி கோரி, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து, நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ரவீந்திரநாத்திடம், நில அபகரிப்பு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், ரவீந்திரநாத் தென் சென்னையில் பணியாற்றியபோது, அலுவலக உதவியாளர்களாக இருந்த நித்யானந்தம், ஆனந்தன் ஆகியோரிடமும், நேற்று விசாரணை நடத்தினர்.

