ரூ.4.50 லட்சம் லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி மீது வழக்கு
ரூ.4.50 லட்சம் லஞ்சம் பெற்ற போலீஸ் அதிகாரி மீது வழக்கு
ADDED : ஜன 03, 2026 07:17 AM

கோவை: நில மோசடி புகார் அளித்தவரிடம், 4.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, வெள்ளலுாரை சேர்ந்த மருதாசலம், மகன் கார்த்திகேயன் மற்றும் குமரேசன் ஆகியோருக்கு சொந்தமான, 2.08 ஏக்கர் நிலத்தை விற்க முடிவு செய்தனர். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் நாகராஜன் மற்றும் நுாருல்லா ஆகியோர், மருதாசலத்திடம் நிலத்தை வாங்க, 6.25 கோடி ரூபாய்க்கு கிரயம் பேசி, முன்பணமாக, 2.42 கோடி ரூபாய் கொடுத்து, பவர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
நிலம் தொடர்பாக, சிவில் வழக்கு நிலுவையில் இருப்பது நாகராஜன் மற்றும் நுாருல்லாவுக்கு தெரிந்து, முன்பணத்தை மருதாசலத்திடம் திரும்ப கேட்டனர். ஆனால், அவர்கள் தராமல் இழுத்தடித்தனர். அந்த இடத்தை, மருதாசலம், கார்த்திகேயன் ஆகியோர், வேறு நபர்களுக்கு விற்பனை செய்தனர்.
நாகராஜன், நுாருல்லா ஆகியோர், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில், 2023 ஜூன் 28ல் புகார் அளித்தனர். அப்போதைய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் குணசேகரன், 57, வழக்கு பதிவு செய்யாமல், தந்தை, மகனை அழைத்து கட்டப்பஞ்சாயத்து பேசி உள்ளார். பணத்தை வாங்கி தருவதற்காக நாகராஜன், நுாருல்லாவிடம், உதவி கமிஷனர், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார்.
பின்னர், போத்தனுார், செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்த புரோக்கர் பிரவீன், 38, வாயிலாக, 4.50 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனாலும், அவர்களுக்கு முழு பணத்தையும் பெற்று தரவில்லை. இதனால் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் விசாரித்து, உதவி கமிஷனர் குணசேகரன், புரோக்கர் பிரவீன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். குணசேகரன் தற்போது கோவை போலீஸ் பயிற்சி பள்ளி ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

