பா.ஜ.,வில் பொறுப்பாளர் நியமனம்; டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு
பா.ஜ.,வில் பொறுப்பாளர் நியமனம்; டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு
ADDED : செப் 09, 2025 05:30 AM

திருச்சி : தமிழக பா.ஜ.,வில், பல்வேறு பிரிவுகளின் மாநில அமைப்பாளர்கள் நியமனத்திலும், டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பது, அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழக பா.ஜ.,வில் மாநில துணைத்தலைவர்கள், பொதுச்செயலர், மாநில செயலர்கள், இளைஞரணி தலைவர் உட்பட 51 பதவிகளுக்கு, சில வாரங்களுக்கு முன் நியமனம் நடந்தது.
அதில், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, கரூர், புதுக்கோட்டை, அரியலுார் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தினர் இடம்பெறவில்லை. இந்நிலையில், தமிழக பா.ஜ.,வில், மீனவர், வழக்கறிஞர், மருத்துவர், கல்வியாளர், நெசவாளர், முன்னாள் படை வீரர் என, 25 பிரிவுகளுக்கு மாநில அமைப்பாளர்கள் பட்டியல் வெளியானது.
தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் பரிந்துரையில், கட்சியின் தேசிய தலைவர் நாட்டாவால் வெளியான அந்த பட்டியலிலும், டெல்டா மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை தவிர, வேறு எந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இடம் பெறவில்லை. தமிழக பா.ஜ.,வில் உயர் பதவிகளில் எந்தவித வாய்ப்பும் அளிக்காதது, டெல்டா மாவட்ட பா.ஜ.,வினர் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.