மனைவி தற்கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகருக்கு 'பிடிவாரன்ட்'
மனைவி தற்கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகருக்கு 'பிடிவாரன்ட்'
ADDED : நவ 12, 2024 07:51 AM

கோவை: கோவை, காந்திபுரத்தை சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம்; பா.ஜ., மாநில பொது செயலாளராக பணியாற்றி வரும், இவர் கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
முருகானந்தத்துக்கும் மதுக்கரை அடுத்த சாவடிபுதூர் பகுதியை சேர்ந்த சுந்தரசாமி மகள் ஞானசவுந்தரிக்கும், கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் தங்க நகை, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருள்களை வரதட்சணையாக முருகானந்தத்துக்கு கொடுத்தனர். திருமணம் முடிந்த சில ஆண்டில்ஞானசவுந்தரி குடும்ப தகராறு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்தார். திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுத்த பொருட்களை, தங்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு கேட்டனர். இதற்கு முருகானந்தம் மறுத்ததால் அவர் மீது,சுந்தரசாமி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, முருகானந்தம் மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதனால், இருவருக்கும் 'பிடிவாரன்ட்' பிறப்பித்து நீதிபதி ரகுமான் உத்தரவிட்டார். வழக்கு வரும் 27 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

