பறவை காய்ச்சல் பரவல்: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
பறவை காய்ச்சல் பரவல்: தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : டிச 25, 2025 07:44 PM

சென்னை:கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதன் காரணமாக, தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், இரு மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
சுகாதாரத்துறை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆலப்புழாவில் உள்ள நெடுமுடி, செருதனா, புறக்காடு உள்ளிட்ட 8 ஊராட்சிகளிலும், கோட்டயத்தின் சில வார்டுகளிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இது உயிருக்கு ஆபத்தான ஹச்5என்1 வகை வைரஸ் என்பது உறுதியானது.
அதை தொடர்ந்து,கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருப்பூர் ஆகிய ஆறு எல்லை மாவட்டங்களில் தீவிர கண்காணிப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உண்பது பாதுகாப்பானது.
பறவைகள் ஏதேனும் அசாதாரணமாக உயிரிழந்தால், உடனடியாகக் கால்நடை பராமரிப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

