ADDED : அக் 04, 2024 12:23 AM
சென்னை:மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு பேசினார். அவர் மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக, சைதை போலீசார் வழக்கு பதிவு செய்து, கடந்த மாதம் 7ம் தேதி கைது செய்தனர்.
ஜாமின் கோரி, மகாவிஷ்ணு தாக்கல் செய்த மனுவில், 'மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் பேசவில்லை; என் பேச்சு புண்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். பேச்சு முழுதையும் கேட்காமல், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி உள்ளேன்' என்று கூறியுள்ளார்.
மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்தது. மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.

