கவுதமியின் நிலத்தை அபகரித்து கைதானவர்களில் 2 பேருக்கு ஜாமின்
கவுதமியின் நிலத்தை அபகரித்து கைதானவர்களில் 2 பேருக்கு ஜாமின்
ADDED : மார் 12, 2024 11:16 PM
சென்னை:நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட, பா.ஜ., பிரமுகரின் மனைவி, மருமகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
தன் சொத்துக்களை விற்க, சினிமா தயாரிப்பாளரும், பா.ஜ., பிரமுகருமான அழகப்பன் என்பவருக்கு, நடிகை கவுதமி பொது அதிகாரம் வழங்கியிருந்தார்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்று, நீலாங்கரையில் கவுதமி பெயரிலும், மனைவி நாச்சல் பெயரிலும் அழகப்பன் நிலம் வாங்கினார். இதுகுறித்து, கவுதமி அளித்த புகாரில், அழகப்பன், அவரது மனைவி நாச்சல், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி, நாச்சல், ஆர்த்தி தாக்கல் செய்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன், விசாரணைக்கு வந்தது.
நாச்சலின் உடல்நிலையை கருதியும், ஆர்த்திக்கு இரண்டு வயதில் குழந்தை இருப்பதாலும், இருவருக்கும் ஜாமின் வழங்க கோரினர்.
இதையடுத்து, இருவருக்கும் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை அதிகாரி முன் இருவரும் ஆஜராகவும், விசாரணை அறிக்கையை ஏப்ரல் 5ல் போலீஸ் தரப்பு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

