சட்டசபை தேர்தல் பணிகளை இப்போதே துவங்க வேண்டும் * தி.மு.க., உயர்நிலை குழு தீர்மானம்
சட்டசபை தேர்தல் பணிகளை இப்போதே துவங்க வேண்டும் * தி.மு.க., உயர்நிலை குழு தீர்மானம்
ADDED : நவ 20, 2024 07:26 PM
சென்னை:சட்டசபை தேர்தல் பணிகளை, இப்போதே கட்சியினர் துவங்க வலியுறுத்தி, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராஜா, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்புச் செயலர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* அனைத்துத் தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது
* தமிழக மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள் மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நடவடிக்கைகளை தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடும் வகையிலும், இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை, இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்
* மணிப்பூர் மாநிலத்தை ஆளும் பா.ஜ., அரசும், மத்திய அரசும் மணிப்பூரைக் கை கழுவி விட்டதாகவே தெரிகிறது. இரண்டு அரசுகளின் அலட்சியம் காரணமாக, எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம் என்ற கேள்வி எழுகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, மனிதநேயம் உயிர் பெற, மத்திய அரசு, பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த வேண்டும்
* மத்திய வருவாயில் மாநில அரசுக்கு, 50 சதவீதம் நிதி பகிர்வை அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு, 50 சதவீதம் நிதியை மத்திய அரசு தர வேண்டும். தமிழகத்தின் கோரிக்கைகள், 16-வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும். அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்
* தி.மு.க., அரசின் சாதனைகள், திட்டங்கள், முதல்வரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகள், தொலைநோக்குப் பார்வைகள் அனைத்தையும் மக்களுக்கு நினைவூட்டுவதன் வாயிலாக, தேர்தல் பிரசாரத்தை இப்போதே துவக்க வேண்டும்.
கட்சியின் ஒவ்வொரு தொண்டரும், இன்று முதல் தேர்தல் பிரசார பணிகளை துவக்க வேண்டும். துண்டு பிரசுரங்கள், திண்ணை பிரசாரங்கள் என, மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் துவங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

