UPDATED : பிப் 07, 2024 02:53 AM
ADDED : பிப் 06, 2024 11:12 PM

சென்னை:காவிரி ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை தொடர்பான ஓட்டெடுப்பில் பங்கேற்றது குறித்து, நீர்வளத் துறை செயலரிடம், அரசு விளக்கம் கேட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., ஆகிய நான்கு அணைகளை கட்டி, கர்நாடகா அரசு நீரை சேமித்து வருகிறது. தற்போது, மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு, கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்தது. இதில், தமிழக பிரதிநிதியாக, நீர்வளத் துறை செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார். இக்கூட்டத்தில், மேகதாது அணை குறித்த கர்நாடகா அரசின் வரைவு திட்ட அறிக்கையை, மத்திய நீர்வளத் துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு ஓட்டெடுப்பு நடந்தது.
அதில் சந்தீப் சக்சேனா பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சட்டசபை கூட்டம் துவங்கவுள்ள நிலையில், இது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டெடுப்பில் பங்கேற்றது குறித்து, நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனாவிடம், அரசு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

