டவுட் தனபாலு: விசில் அடிக்கும் ரசிகர்களை நம்பி தப்பு கணக்கு போடுறீங்களோ
டவுட் தனபாலு: விசில் அடிக்கும் ரசிகர்களை நம்பி தப்பு கணக்கு போடுறீங்களோ
ADDED : ஜன 28, 2024 12:57 AM

நடிகர் விஜய்: ரசிகர்களான உங்களின் ஏகோபித்த முழு ஆதரவுடன் தான் கட்சி துவக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறோம். மக்கள் இயக்கம், கட்சியாக மாறும்போது, தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் கொள்கைகள் வகுக்கப்படும். மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்.
டவுட் தனபாலு: தமிழகத்துலநடிகர்களா இருந்து அரசியல்ல ஜெயிச்சது எம்.ஜி.ஆரும், ஜெ.,யும் மட்டும் தான்... அதன்பின், எத்தனையோ நடிகர்கள் அரசியல்ல குதிச்சு காணாம போயிருக்காங்க... விசில் அடிக்கிற ரசிகர்கள் ஆதரவை மட்டும் வச்சு கோட்டையில கொடியேத்திடலாம்னு தப்பு கணக்கு போடுறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான புடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: டில்லி மாநில அரசு, ராம ராஜ்ஜியத்தின் உந்துதலால் இலவச கல்வி, சுகாதாரம், மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் தடையில்லாத மின்சார வினியோகம், இலவச குடிநீர் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... உங்களுக்கு துணை முதல்வராக இருந்த ஒருத்தர், மதுபான கொள்கையை வகுப்பதில் முறைகேடு பண்ணி, இப்ப திஹார் ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்காரே... அதுக்கு யார் உந்துதலா இருந்தது என்ற, 'டவுட்' வருதே!
தமிழக முதல்வர் ஸ்டாலின்: பா.ஜ., அரசின் தோல்விகளை பட்டியலிட்டால், 2014ல், 414 ரூபாயாக இருந்த சமையல் காஸ் சிலிண்டர் விலை, தற்போது 918 ரூபாய். இப்படி அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை, பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 'இண்டியா' கூட்டணி வெற்றியில் தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.
டவுட் தனபாலு: நாட்டில், 10 வருஷத்துக்கு முன்னாடி வாங்கிய சம்பளத்தையே எல்லாரும் இப்பவும் வாங்குறாங்களா என்ன...? தமிழகத்துலயே, 10 வருஷத்துக்கு முன்னாடி, ரேஷன் கடையில, 1 கிலோ சர்க்கரை 13 ரூபாய்க்கு இருந்தது, இப்ப 25 ரூபாயா ஏறியிருக்குதே... இதை எல்லாம் கணக்குல எடுத்துக்க மாட்டீங்களா என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞர் அணி மாநாட்டில் பல நகைச்சுவைகள் அரங்கேறின. அது உரிமை மாநாடு அல்ல; கேளிக்கை மாநாடு. 'நீட்'டுக்கு எதிராக தி.மு.க.,வினர் பெற்ற கையெழுத்து படிவங்கள் கீழே கிடந்தன.
டவுட் தனபாலு: சேலம் மாநாட்டுல, தி.மு.க., தொண்டர்களுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65ன்னு விருந்து கொடுத்து அசத்தியிருக்காங்க... ஆனா, நீங்க நடத்துன மதுரை மாநாட்டுல, அண்டா அண்டாவா புளியோதரை மீதமாகி, 'நெட்டிசன்'கள் தாளிச்சு கொட்டியதை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை, தி.மு.க.,வினர் பேச்சைக் கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கி விடலாம் என்ற இறுமாப்பில் செயல்படுவது அழகல்ல. சட்டப்படி இன்னும், 28 அமாவாசைகள் மட்டுமே, தி.மு.க., அரசு இருக்கும் என்பதை உணர்ந்து, காவல் துறையினர் நேர்மையாக பணிபுரிய வேண்டும்.
டவுட் தனபாலு: லோக்சபா தேர்தல் நெருங்குது... களத்துல இறங்காம, இப்படியே மொட்டை மாடியில நின்றபடி அமாவாசை, பவுர்ணமியை எண்ணிட்டு இருந்தா, 28 அமாவாசை இல்ல, 280 அமாவாசை ஆனாலும், அ.தி.மு.க., ஆட்சி அமைவது, 'டவுட்'தான்!
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா: காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி, 'இண்டியா' கூட்டணி இல்லை; இறுமாப்பு பிடித்த ஊழல் கூட்டணி. ஒருபுறம், ராமர் சிலைக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மறுபுறம், அசாமில் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் கலவரம் நடக்கிறது.
டவுட் தனபாலு: எந்த பக்கம் திரும்பினாலும், ராமர் கோவிலை பத்தி தான் பேசுறாங்க, எழுதுறாங்க... அதனால, களத்துல நாங்களும் இருக்கணும் என்பதை காட்டிக்கவே, இந்த மாதிரி யாத்திரைகள், வம்பு, வழக்குன்னு காங்., தலைவர்கள் பொழுது போக்கிட்டு இருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

