பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய ஆந்திர கும்பல் கைது; 79 மொபைல் போன்கள் பறிமுதல்
பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய ஆந்திர கும்பல் கைது; 79 மொபைல் போன்கள் பறிமுதல்
ADDED : டிச 27, 2025 07:56 AM

அவிநாசி: சென்னை, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகளிடம், விலை உயர்ந்த மொபைல் போன்களை திருடிய ஆந்திர கும்பலை போலீசார் கைது செய்தனர். கும்பலிடம் இருந்து 79 மொபைல்போன்கள், இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் பெருமாநல்லுார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம், நெரிசலைப் பயன்படுத்தி, அதிகளவில் மொபைல்போன்கள் திருடப்பட்டு வந்தன.
எஸ்.பி. அசோக் கிரிஷ் யாதவ் உத்தரவின் பேரில் அவிநாசி டி.எஸ்.பி. சிவகுமார் மேற்பார்வையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துமாரியம்மாள், எஸ்.ஐ. சிவக்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
பழங்கரை அருகே சேலம் - கொச்சி பைபாஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட இரண்டு சொகுசு கார்களை போலீசார் கண்காணித்தனர்.
விசாரணையில், காரில் இருந்தவர்கள், ஆந்திராவை சேர்ந்த நக்கா ஹரீஷ், 44, ராஜூ, 31, பாஷா, 25, பிரகாஷ் 32, ஒடிசாவை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பதும்; அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இரண்டு மொபைல்போன்கள்; கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டாண்ட்கள் மற்றும் புதுவையில் பயணிகளிடம் இருந்து விலை உயர்ந்த மொபைல்போன்களை திருடியதும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 79 மொபைல்போன்கள்; இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுவன், கோவை சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

