புகையிலை வைத்திருந்தவருக்கு கழிப்பறை அமைக்க உத்தரவு
புகையிலை வைத்திருந்தவருக்கு கழிப்பறை அமைக்க உத்தரவு
ADDED : பிப் 03, 2024 01:22 AM
மதுரை:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் லலித்குமார் என்பவர், தடை செய்யப்பட்ட, 495 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக, கும்பகோணம் மேற்கு போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
கைதான லலித்குமார், உயர் நீதிமன்ற கிளையில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி தண்டபாணி விசாரித்தார். அரசு தரப்பில், 'மனுதாரருக்கு எதிராக இதுபோன்ற இரு வழக்குகள் உள்ளன; ஜாமின் வழங்கக் கூடாது' என வாதிடப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை போலீசில் ஆஜராக வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டம், சீரமேல்குடி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை அமைப்பதற்காக, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
அதற்கான ஆதாரம், ஆவணங்களை பள்ளி தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட நீதித்துறை மாஜிஸ்திரேட் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.

