ADDED : டிச 21, 2024 01:04 AM
ஈரோடு: ஈரோட்டில் நலத் திட்டங்களை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தி.மு.க., அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றியதுடன், புதிய, புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. இதை உணர்ந்த மக்களும், எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வயிற்றெரிச்சல் காரணமாக, புலம்புகிறார்.
பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாநில அரசே அனைத்தையும் செய்துள்ளது.
இதை பொறுக்காத பழனிசாமி 'முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனுார் அணையை திறந்தனர்' என பொய் செய்தி பரப்புகிறார். ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தான், செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்து, 200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் இறந்தனர். 23 லட்சம் வீடுகள் மூழ்கின. இதை ஆதாரத்துடன் சட்டசபையில் நாங்கள் அம்பலப்படுத்தியதும், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை எடுத்து கொண்டனர்.
எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பே இந்த அரசு, சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது.
சட்டசபை முடிந்த பின் பார்த்தால், டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கான சட்ட திருத்தத்தை பார்லிமென் டில் அ.தி.மு.க., ஆதரித்து ஓட்டளித்தது. அதை மழுப்புவதற்காக சட்டசபையில் பழனிசாமி வாய்கிழிய பேசியுள்ளார்.
காலி குடம் உருண்டால் சத்தம் அதிகமாக தான் வரும். நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும், அதில் துளியும் உண்மை இல்லை. பொய் நெல்லை குத்தி, பொங்கல் வைக்க முடியாது.
உங்களது, நான்கு வருட ஆட்சியில், உங்கள் பதவி சுகத்துக்காக, சுயலாபத்துக்காக பலருக்கு துரோகம் செய்து, தமிழக உரிமைகளை அடமானம் வைத்ததை மக்கள் அறிவர்.
பழனிசாமியும், ராஜ்யசபாவில் உள்ள அவர்களது எம்.பி.,க்களும், மாநில உரிமை பற்றி மத்திய அரசை பார்த்து ஒரு கேள்வி கூட கேட்க தைரியமில்லாதவர்கள்.
எங்களை பார்த்து கத்தி பேசும் நீங்கள், மத்திய அரசை எதிர்த்து கீச்சு குரலில் கூட எதிர்த்து பேச துணிச்சல், திராணியற்றவர் என்பதை மறந்து விடாதீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

