தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வில் அமித் ஷா 'பார்முலா'
தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பா.ஜ., வேட்பாளர்கள் தேர்வில் அமித் ஷா 'பார்முலா'
UPDATED : டிச 27, 2025 12:11 AM
ADDED : டிச 27, 2025 12:10 AM

சட்டசபை தேர்தலில், தமிழக பா.ஜ., சார்பில் தயாரிக்கப்படும் வேட்பாளர் பட்டியலில், 80 சதவீதம் மாவட்ட பொறுப்பாளர்கள், 20 சதவீதம் மாநில நிர்வாகிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல், பா.ஜ., பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், இணை பொறுப்பாளர்களான மத்திய இணை அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் ஆகியோர் சமீபத்தில் சென்னை வந்தனர்; தமிழக பா.ஜ., மையக்குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின், பா.ஜ., தலைவர்கள், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது, அமித் ஷா தரப்பில், தேர்தல் வியூகம் அமைக்கும் நிறுவனம், மத்திய உளவுத்துறை தேர்வு செய்த 50 தொகுதிகளின் பட்டியல் கொடுக்கப்பட்டது.
வருவாய் மாவட்டம் மற்றும் லோக்சபா தொகுதிகளின் அடிப்படையில், குறைந்தபட்சம் 40 தொகுதிகளை பா.ஜ.,வுக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு, அ.தி.மு.க., 30 தொகுதிகளை தர சம்மதம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, எந்தெந்த தொகுதிகளில் யார், யாரை வேட்பாளராக்குவது என்ற பட்டியல் தயாரிப்பு தொடர்பாக, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகி ஒருவர், டில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர் ஆலோசனையின்படி, வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 30 அல்லது 35 தொகுதிகள் ஒதுக்கினால், அவற்றில் 25 தொகுதிகளாவது வெற்றி பெறும் வகையில் அமித் ஷா வியூகம் அமைத்து உள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களை 100 சதவீதம் நியமித்த, மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் போன்றோர், வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாவட்ட பொறுப்பாளர்களுக்கு 80 சதவீதம், மாநில நிர்வாகிகளுக்கு 20 சதவீதம், வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, இரண்டு அல்லது மூன்று முறை தோல்வி அடைந்தவர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., கவர்னர், மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவர்கள் போன்றவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுவது குறைவு தான். குற்ற பின்னணி உள்ளவர்களுக்கும் போட்டியிட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

