ADDED : டிச 14, 2025 10:14 AM

பார்லிமென்ட் கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வந்தே மாதரம் மற்றும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி தொடர்பான விவாதங்களும் நடைபெற்று முடிந்தன.
இதில், 'ஓட்டு திருட்டு குற்றச்சாட்டில் மத்திய அரசை ஒரு வழியாக்கி விட்டார், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல். குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டென்ஷனாக்கி விட்டார்' என, காங்கிரசார் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். இந்த விவகாரத்தில், காங்கிரசின் குற்றச் சாட்டுகளுக்கு அதிரடியாக பதில் அளித் தார், உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஆனால், அதைக் கேட்காமல் காங்கிரஸ் வெளிநடப்பு செய்துவிட்டது. அமித் ஷாவிற்கு லேசான காய்ச்சல்.
இதனால், அவரின் உடல்நிலையைக் கண்காணிக்க, இரண்டு டாக்டர்கள் லோக்சபாவிற்கு வெளியே, 'லாபி'யில் காத்திருந்தனர். 'நீங்கள் அதிகம் பேச வேண்டாம்; ஓய்வெடுக்க வேண்டும்' என, டாக் டர்கள் ஆலோசனை அளித்தனர்; ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டார் அமித் ஷா. ராகுலுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக, ஆராய்ச்சி செய்து பலவித ஆவணங்களை எடுத்துக்காட்டி, ஆட்சி யில் இருந்த போது காங்கிரஸ் என்னவெல்லாம் செய்தது என்பதை விலாவாரியாக விளக்கினார் அமித் ஷா.
அவருடைய பேச்சு முடிந்ததும், லாபியில் உள்ள டாக் டர்கள் அமித் ஷாவின் உடல்நிலையைப் பரிசோதித்தனர். அதில், அவருடைய ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. 'ஓய்வு எடுங்கள்' என, மீண்டும் டாக்டர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், இரவு இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றார்.

