ADDED : அக் 08, 2024 10:52 PM
சென்னை:இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களையும், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட, 192 படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் துாதரகத்தை முற்றுகையிடப் போவதாக, பா.ம.க., அறிவித்திருந்தது.
அதன்படி, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பா.ம.க., பொருளாளர் திலகபாமா தலைமையில் நுாற்றுக்கணக்கான பா.ம.க.,வினர் திரண்டனர்.
இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோஷமிட்ட அவர்கள், இலங்கை துணைத் துாதரகத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேர் மட்டும், நந்தனத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில், தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மனு கொடுத்தனர்.

