வெள்ள பாதிப்பு சீரமைப்புக்கு ரூ.280 கோடி ஒதுக்கீடு
வெள்ள பாதிப்பு சீரமைப்புக்கு ரூ.280 கோடி ஒதுக்கீடு
ADDED : பிப் 06, 2024 11:18 PM
சென்னை:தென்மாவட்ட நீர்வழித்தடங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீரமைக்க, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 2023 டிசம்பரில் கனமழை கொட்டி தீர்த்தது.
ஆறுகள், அணைகள், ஏரிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நீர்வழித்தடங்களில் அரிப்புகள், கரை உடைப்பு, ரெகுலேட்டர்கள், மதகுகள் சேதம் அடைந்தன.
இவற்றை நிரந்தரமாக சீரமைக்க, நீர்வளத்துறை வாயிலாக அரசிடம் நிதி கேட்கப்பட்டு இருந்தது. அதன்படி, நிரந்தர வெள்ள சீரமைப்பு பணிக்கு, 280 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுமட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில், குண்டாறு வடிநிலப் பகுதிகளில், 10 இடங்களில் பணிகளை மேற்கொள்ள, 91 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
விருதுநகரில், வைப்பாறு, குண்டாறு, மேல் வைப்பாறு வடிநிலப் பகுதிகளில், நான்கு இடங்களில் பணிகளை மேற்கொள்ள, 1.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

